சொந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீக குடி ஒன்றை நிரந்தர அகதியாக்கி அதில் அரசியல் இலாபம் தேடும் உலக நாடுகளின் இராஜதந்திர பயணம்
இன்று எல்லா உலக நாடுகளும் ஒருமித்த குரலில் சிறிலங்கா படையினரால் குறுகிய பிரதேசத்துள் அடக்கப்பட்டுள்ள மக்களை வெளியே வரும்படி கோரிக்கை விடுக்கின்றது. அப்படி கோரிக்கை விடுவது சரியா? தமிழ் மக்கள் பகடைகளாக்கப்பட்டு உலக அரங்கில் அரசியல் பொருளாக்கப்பட்டு காலங்கள் கழிந்தோடிக் கொண்டுள்ளது. மக்களின் இறப்பு எண்ணிக்கைகள் கணக்கிடப்பட்டுக் கொண்டுள்ளதே தவிர இதுவரை தடுத்து நிறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை.அல்லது வந்ததாகக் கூட காட்டவில்லை.ஏதோ தமிழ் மக்கள் தாமாக இவ் சூழ்நிலைக்குள் அதாவது யுத்ததிற்குள் தங்களை இட்டுக் கொண்டதாக காட்டி அறிவுரை கூறுவதில் மாத்திரம் எல்லோரும் உள்ளார்களே தவிர மனித உயிர்கள் வீம்புக்காக பறிக்கப்படுவது பற்றி சிந்திக்க தலைப்பட்டவர்களாக புலம்பெயர் மற்றும் உலகவாழ் தமிழர் தவிர்ந்த ஒருவரையும் இதுவரை காண முடியவில்லை. அதில் சில தமிழர் பேச்சுக்களும் தமிழ் அழிப்புக்கு துணைபோவதும் நடந்து கொண்டுள்ளது. அவர்கள் வெறும் சுயலாப அரசியல் நடத்தும் அரசியல் ஏதிலிகள் என்பது மக்களுக்கு நன்குதெரியும். அவர்களுக்கும் நன்கு தெரியும்.
தமிழ் மக்கள் இவ் அவலநிலையை வலிந்து பெற்றுக் கொண்டதாக கூறத்தலைப்படும் உலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மிகத் தெளிவாகப்புரிய வேண்டிய விடயம். தமிழ் மக்கள் எக்காலத்திலும் போரையும் யுத்தத்தினையும் விரும்பியவர்கள் இல்லை. அதை வலிந்து ஏற்றுக் கொண்டவரும் இல்லை.சிறிலங்கா அரசுக்கு புரியாவிட்டாலும் இந்தியாவின் பல அரசியற் பிரமுகர்கள் மற்றும் கொள்ளை வகுப்பாளர்கள் இதை புரிந்திருப்பார்கள். அதாவது உலகைவிட சிறிலங்காவின் யுத்த வெறிபிடித்த அரசியல் வாதிகளை விட இந்தியா சார்ந்தவர்கள் தமிழ் மக்கள் நிலையை புரிந்திருப்பார்கள்.
சிறிலங்கா ஒப்புக்கு கூறிவரும் விடயங்கள் தவிர்ந்து சிறிலங்காவுக்கும் நன்கு தெரியும். தமிழ் மக்கள் மீது தான் யுத்தத்தினை திணித்துள்ளோமா? இல்லை தமிழ் மக்கள் யுத்தத்தினை விரும்பினார்களா என்று? எனவே யுத்தம் திணிக்கப்பட்டுள்ள ஒரு இனம் சார் மக்களாக இன்று ஈழத்தமிழ் மக்கள் உள்ளார்கள். அந்நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளார்கள். ஈழப்போராட்டத்தின் பக்கங்கள் மிகத் தெளிவாக விட்டுச் சென்ற விடயங்கள் என்ன என்பது தெரிந்தவர்களும் இதை புரிந்திருப்பார்கள்.
வன்னியில் யுத்தப்பிரதேசத்தில உள்ள அப்பாவி தமிழ் பொதுமக்கள் சிறிலங்கா படையினராலும் சிறிலங்கா அரசினாலும் தமது தேர்தல் வெற்றிகளுக்கும் ஆட்சி நீடிப்புக்கும் பொருளாதார சரிவை மூடி மறைப்பதற்கும் பணயப் பொருளாக வைக்கப்பட்டுள்ள மக்கள் என்பது நாங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம். மாறாக உலகம் கூறுவதுபோன்று சிறிலங்கா மற்றும் இந்தியா கூறுவது போன்று அவர்கள் யுத்தப்பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் என்னும் பதப்பிரயோகம் முற்றிலும் தவறானது. பிரயோகிக்க முடியாதது. சிறிலங்காவின்,உலகத்தின் அரசியல் இலாபங்களுக்கு பொருளாதார இருப்புக்கு ஆக்கிரமிப்புக்கு அடகு வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்கள் என்பதும் இதில் அடங்கும். எனவே இதுவரை யுத்தில் சிக்கியுள்ள மக்கள் என்னும் பதத்தின் மூலம் அவர்கள் விழிக்கப்பட்டு வந்தது முற்றலும் தவறு. ஒரு இனம் சார்நத பூர்வீக குடிசார்ந்த நிலம் சார்ந்த மக்களாகிய வடபுல சிறிலங்காவின் முற்று முழுதான தமிழர் நிலம் சார்ந்த மக்கள் அவர்கள் அவர்கள் தமது சொந்த நிலத்தில் வாழ விரும்பும் சராசரி மக்கள் தமது சொந்த வளங்களை நுகரும் உரிமையுடைய மக்கள். இதை சர்வதேசம் மறந்துள்ளதா? இல்லை சொந்த நலனுக்காக மறந்ததாக காட்டிக் கொள்கின்றதா தெரியவில்லை? அமெரிக்க அதிபராக ஓபாமா ஆட்சிமேடையில் ஏறும்போது இவ் பூமியில் அனைவரும் வாழும் உரித்து கொண்டவர் என பேசிய விடயம் ஒன்றை இங்கு நினைவு கூரலாம்.அடுத்தடுத்து அறிவுரைகள் கூறுவதிலும் நீலிக்கண்ணீர் வடிப்பதில் தம்மை விஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதை காட்ட போட்டி போடும் அவர்கள் உலக நாடுகள் சில அடிப்படை விடங்களை மறந்துள்ளார்கள். அல்லது மறந்தவர்களாக காட்டிக் கொண்டுள்ளார்கள்.
விமர்சனங்கள் கூறுவதும் குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதும் தான் அவர்கள் செய்யும் பிரதான காரியம். உண்மைகளை புரிந்து நியாயத்தின் படி மனிதாபிமானத்தின் படி நடந்து கொள்ள அவர்கள் தவறுகின்றார்கள் என்பது வெளிப்படை. அதற்கான முற்று முழுதான காரணம் சுயநலம் அதிலும் இந்தியா என்னும் பாரிய தேசத்தின் மிகையளவான தலையீடுகள் என்பதை மறுத்துரைக்க முடியாது.
வன்னிக்குள் யுத்தப்பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் என்னும் பதப்பிரயோகத்தின் மூலம் அந்த மக்களை வேறுபடுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உலகம் ஒத்து நிற்கின்றது. அவர்களின் பூர்வீக நிலம். அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அதில் அவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள் யாரால் அகதிகள் என்பதை உலகம் புரிய மறுக்கின்றது.
உலகின் இயற்கை அனர்த்தம் ஒன்று நிகழும் போது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதன்போதான மக்களின் இறப்புக்கு மக்களின் பாதிப்புக்கு அவ் இயற்கை அனர்த்தம் நடந்த பகுதிசார் மக்களா காரணம்? இல்லை இயற்கையா காரணம்? என்பது இன்று சர்வதேசம் கூறும் கருத்துகளுடன் கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. அதாவது பெரும் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களின் தவறா இல்லை இயற்கையின் தவறா? அச்சந்தர்ப்பத்தில் மக்களை குறை கூறுவது சரியா? அது போல் வன்னியில் இன்று மக்கள் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் சிறிலங்கா அரசின் யுத்த வெறியில் சிக்குண்டு இறக்கின்றார்கள். இது யார் தவறு மக்கள் தவறா இல்லை சிறிலங்காவின் தவறா?எனவே நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறிலங்கா அரசே தவிர அங்குள்ள மக்கள் இல்லை.
சிறிலங்கா அரசு கூறுவது போன்று தமிழ் மக்களையும் தனது நாட்டுப்பிரஜைகள் தாம் சமமாக நடாத்தும் மக்கள் என்றால் அவர்களை சிறிலங்காவின் மக்கள் என்றல்லவா கூறவேண்டும். அவர்களை ஏன் இன்னும் வடக்கு மக்கள் தமிழ் மக்கள் என்று கூறி வருகின்றது. அவர்களுக்கு வேறுநாட்டு மக்களுக்கு உணவு மற்றும் மருந்து அனுப்புவது போன்று புள்ளிவிபரங்கள் சமர்ப்பித்து திருப்திப்படுத்த பார்க்கின்றது.
இவற்றினை நம்பி அதாவது சிறிலங்காவின் போலி வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளை நம்பிய அல்லது நம்பியதாக காட்டிக் கொண்டுள்ள சர்வதேசம் இந்தியாவின் அறிவுரைக்கு அமைய வன்னியில் சிறிலங்காவின் இந்தியாவின் நலனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி சிறிலங்கா அரசு கூறிவரும் நலன்புரி நிலையம் என்னும் வதைமுகாமுக்குள் வரும்படி தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்.
உலகின் எந்தச் சட்டத்தில் ஒருவர் வலிந்த யுத்தத்தினை நடத்த அதில் பாதிக்கப்பட்டவர்கள் வலிந்த யுத்தம் நடாத்துபவர் பகுதிக்குள் வரும்படி கூறுவது பதியப்பட்டுள்ளது.இனிப்பதியப்பட இருக்கின்றது. மிகத் தொளிவாகத் தெரியும். இனம் படுகொலை செய்யும் ஒரு அரசை நம்பி வாருங்கள். ஆனால் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பு என்று உலகின் உள்ள அத்தனை நாடுகளின் கோரிக்கைகள். இது அவற்றின் ஆழ் மனது கோரிக்கையா இல்லை இந்தியாவின் கோரிக்கைக்கு ஜதிபாடும் அவர்களின் பாவனையா தெரியவில்லை.
ஏதோ சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கொலைகள் நடக்கவில்லை இல்லை நடந்ததும் இல்லை என்பது போல் இந்தியாவின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றது. உலகம் அதற்கு ஒத்து ஊதுகின்றது.கொழும்பில் இருந்த தமிழ் மக்களை இரவோடு இரவாக ஏற்றி தமிழர் பகுதிகளை நோக்கி அனுப்பிய சிறிலங்காவின் பதிவுகளை மறந்து விட்டனவா இவ் நாடுகள் இல்லை தமது நலனுக்காக மறைத்து விட்டனவா?
இன்று சிறிலங்காவின் அரசுக்கும் அவர்களின் யுத்த வெறிக்கும் வால்பிடிக்கும் இந்தியா ஒன்றை சிந்த்துப் பார்க்கவேண்டும். 80களில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது தமிழ் மக்களை இரண்டாம் தரமாக நடாத்துகின்றது என கருதிய இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை விடுதலைப் போராட்டமாக ஏற்று கொண்ட இந்தியா இன்று அந்த விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்னும் பதப்பிரயோகத்துக்குள் அடக்கிவிட நினைக்கின்றது. இரண்டு தசாப்தத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்கள் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ள வேளையில் இந்தியா மூக்கை நுளைத்து தனது கொள்கையை மாற்றி கொண்டு தமிழின் அழிப்புக்கு துணைபோகின்றது. அதற்கு வெளிநாடுகள் பலவும் ஒத்து ஊதி வருகின்றன.
இந்தியா இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா நடாததும் போருக்கு உதவுவதற்கு சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் மன்னிப்பு மனப்பான்மைக்கு ஆதாரமாக தற்போதைய இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார். இன்று எல்லா உலக நாடுகளும் ஒருமித்த குரலில் சிறிலங்கா படையினரால் குறுகிய பிரதேசத்துள் அடக்கப்பட்டுள்ள மக்களை வெளியே வரும்படி கோரிக்கை விடுக்கின்றது. அதாவது சிறிலங்கா அரசினால் நிர்வகிக்கப்படுகின்ற வதைமுகாம்களுக்குள் வந்து அடைபட்டு வருடக்கணக்கில் கிடவுங்கள் என்னும் தொனியில் அவற்றின் அழைப்புக்கள் உள்ளன. இவ்வாறு அழைப்பு விடும் நாடுகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் என்ன.
பிரித்தானியா காலனித்துவ காலத்தில் சிம்பாப்வேயில் குடியேற்றி சிம்பாப்வே பூர்வீக குடிகளை அடிமையாக்கி அவர்கள் நிலபுலங்களை பறித்து தனது பிரஜைகளுக்கு கொடுத்திருந்தது. 1980 இல் சிம்பாப்வே சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த முகாபே தொடர்ச்சியாக பிரித்தானியர்களுக்கு எதிரான பழிவாங்கல்களில் ஈடுபட்டு அவர்களின் நிலபுலங்களை எல்லாம் பறித்து எடுத்து அவர்கள் சொத்துக்கள் அற்ற அனாதைகள் ஆக்கி கொண்டுள்ளார். அவ்வாறு துன்பங்களுக்குள் உள்ளான மக்களை ஏன் இன்னும் தனது நாட்டுக்கு திரும்பி வாருங்கள் உங்களுக்கு சிறிலங்கா அமைத்து உள்ளது போன்ற நிவாரணக் கிராமங்களில் குடிசைபோட்டு வாழ விடுகின்றோம் என கேட்கவில்லை.
அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படும் சுழல் காற்று மற்றும் புயலால் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றார்களே ஏன் அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் கோரிக்கையை அமெரிக்கா விடுத்தவில்லை காட்டுத்தீயால் பாதிக்கப்டும் மக்களை ஏன் அவுஸ்திரேலியா காடுகளை விட்டு விலகி தூரத்தில் குடியமருமாறு கேட்கவில்லை.அது போல் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் கனடா கேட்கவில்லை. பனிப்பொழிவில் வருடா வருடம் நோர்வேயில் மக்கள் இறக்கின்றார்களே ஏன் அவர்களை நோர்வே வேறு இடங்களில் குடியமாத்தி அவர்களின் உயிர்களை பாதுகாக்க முன் வரவில்லை.
சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நதியைச் சூழவும் வருடா வருடம் பல ஆயிரம் மக்கள் வெள்ளப் பெருக்கால் உயிரிழக்கின்றார்களே ஏன் சீனா அவர்களை அப்புறப்படுத்தி நலன்புரி நிலையங்களில் வைக்கவில்லை. அவர்களை நிரந்தர அகதிகளாக்கி தன்னும் உயிர் காக்க முன்வரவில்லை. வங்காள தேசத்தில் இயற்கை அனர்த்தங்களால் வருடா வருடம் மக்கள் இறக்கின்றார்களே ஏன் அவர்களுக்கு நலன்புரிக் கிராமங்கள் அமைத்து தங்க வைக்க உலகின் தொண்டு நிறுவனங்கள் முன் வரவில்லை.
இவை அனைத்தும் தடுத்து நிறுத்த முடியாத தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் சிறிலங்காவினால் நடத்துப்பட்டுக் கொண்டுள்ளது. செய்கையான தமிழ் அழிப்பு போர். இன அழிப்பு போர் அண்மையில் இஸ்ரேலினால் காசா மீது படையெடுக்கும் போது பலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டபோது ஏன் உலக நாடுகள் அவர்களை கோரவில்லை இஸ்ரேலின் பக்கம் வாருங்கள். பின்னர் போர் முடிய நீங்கள் உங்கள் பிரதேச்த்துள் செல்லலாம் என உபதேசம் செய்யவில்லை.
இதில் இருந்து தமிழ் மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது உலகில் யுத்தம் இழப்புககள் என்பன புதியவை இல்லை. தமிழ் மக்களுக்கும் இழப்பும் அழிவும் புதியது இல்லை. சிங்களவர்களால் மாதிரம் ஏற்படுத்தப்படும் இழப்புக்களுக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்கள். இன்று உலகத்தினால் பல நாடுகளால் மேற் கொள்ளப்படும் மேற் கொள்ள தூண்டப்படும் இழப்புக்கள் அவர்களுக்கு புதிது. தாங்கமுடியாதது. ஓட்டு மொத்த உலகும் ஏன் தம்மை மட்டும் அகதியாக்கி நிரந்தர அகதியாக்கி அதுவும் தமிழ் மக்களாகிய தங்களை பரம எதிரிகளாக இன்று நேற்றல்ல 2000வருடங்களாக பரம எதிரியாக பார்க்கும் சிங்களவர் கைகளில் கொடுக்க எத்தனிக்கின்றது என்னும் கேள்விகள் கவலைகள் பலமாகி வருகின்றது. இவை இந்தியாவின் விளையாட்டு மட்டுமல்ல அவர்களின் உபதேசம் தான் என்பது புரிந்துள்ள விடயம்.
இந்தியா அதாவது உலகத்தில் சமத்துவம் உள்ள முதல் நாடு எனக் கூறிக்கொள்ளும் நாடு 3 வீதம் மாத்திரமே உள்ள ஒரு சிறுபான்மை இனத்தவர் பிரதமராக உள்ள நாடு எனக்கூறிக் கொள்ளும் நாடு. பல மொழி பல மதம் வாழும் நாடு எனச் சொல்லிக் கொள்ளும் நாடு. காஸ்மீரில் தினமும் மடியும் தன் மக்களை வெளியேற்றி ஏன் நலன்புரி நிலையத்தில் வைக்கவில்லை. நிரந்தர அகதியாக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்ற அறிவுறுத்தல் விடும் அறிக்கைகள் எழுதும் இந்தியா ஏன் தனது நாட்டில் இதைச் செய்யவில்லை. இதை ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு மனித நேயம் மிக்கவனும் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஈழத்தின் பூர்வீகக்குடிகள் என ஏற்றுக் கொள்ளும் இந்தியா ஏன் அவர்களை அவர்கள் தாயகத்தில் இருந்து வெளியேறுங்கள். சிறிலங்கா யுத்தம் நடத்தட்டும் எனக்கூறவேண்டும். இல்லை சிங்களவர் கூறுவது போன்று தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். வந்தேறு குடிகள் என்றால் கூட இந்தியாவுக்கல்லவா தமிழரை அழைத்துச் செல்ல இந்தியா முனையவேண்டும். எவ்வாறு எந்த தார்மீக ரீதியில் சிறீலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாருங்கள். அவர்கள் உங்களை அகதியாக வைத்திருப்பார். அடைத்தும் வைத்திருப்பார். செய்யக்கூடாத எல்லாம் செய்வார். எங்கள் உயிரை மட்டும் தருவார். தேவையெனில் புலி எனக்கூறி அதையும் பறிப்பார். மொத்தத்தில். உங்கள் அத்தனை விடயங்களையும் சிறீலங்காவிடம் ஒப்படையுங்கள் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் எனக்கூறுவது எந்த வகையில் நியாயமானது.
சிறிலங்காவிடம் ஒப்புக்கு வதைமுகாமில் உள்ள மக்களை விடுவியுங்கள் எனக்கூறுவருகின்றனவே தவிர இன்னும் அது நடந்ததாக இல்லை. எனவே சிறிலங்கா உலகத்தின் மற்றும் இந்தியாவின் சொல்லை கேட்கவில்லை. இவ்வாறு இருக்கையில் அவற்றின் பேச்சை நம்பி எவ்வாறு மக்கள் வரமுடியும். அதுவும் தமது பூர்வீக வாழ்விடம். சுதந்திர வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் உடைமைகளை விட்டு எவ்வாறு வரமுடியும்.
இது உலகத்தில் என்றும் நடக்காத கொடுமை. இனியும் நடக்க கூடாத கொடுமை. சில சுயநல நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்காக ஒரு இனத்தினை அழிக்கும் பாரதூரமான வேலை. பூர்வீகக் குடி ஒன்றை நிரந்தர அகதியாக்கி அதில் அரசியல் இலாபம் தேடும் உலகின் கோரமான இராஜதந்திர பயணம் இவை
ரகசியா சுகி
பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள்
களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள்.சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால்... பல உண்மைகளை புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகள் தாம் இவ்வாறான இக்கட்டான நிலைமையை அடைவதற்கு ஒருபோதும் தாங்களாகவே இடமளிப்பவர்கள் அல்லர். புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தினை பூநகரிக்கு முன்பாகவே தடுத்திருக்க முடியும். தமது பெருநிலப்பரப்புகளை தக்கவைத்து இருந்திருக்கவும் முடிந்திருக்கும். ஆனால் அதற்கான மிகப்பலமான எதிர்ப்புக்களை அவர்கள் காட்டியிருக்கவில்லை. அப்படியிருக்க, புலிகள் படையினரை இவ்வளவு தூரத்திற்கு முன்னேற அனுமதித்தது ஏன்?
இக்கேள்விக்கு இராணுவ ரீதியிலான பல பதில்கள் இருந்தாலும், அரசியல் ரீதியிலான காரணங்களே அடிப்படையாக இருக்கின்றதாக புலப்படுகின்றது. ஏனெனில், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகள் அரசியல் நகர்வுகளிலேயே சிரத்தையெடுத்து வந்திருந்தனர். முன்னர், சந்திரிக்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாமாக விலகி மூன்றாம் கட்ட ஈழப்போருக்குள் புலிகள் நுழைந்ததனால் சர்வதேசத்தின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தனர். அதே தவறை புலிகள் இம்முறையும் இழைத்திருக்கவில்லை. மகிந்த அரசுதான் சமாதான உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தாங்கள் அதை மதித்து நடந்து வருவதாகவே புலிகள் கூறிவருகின்றனர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். தமிழீழ நிலப்பரப்பில் எழுபது சதவீதமான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தினைக் கூட மீளக் கைப்பற்றும் வல்லமையை பெற்றிருந்தனர் புலிகள்.[அப்போதும் அதை தடுத்திருந்தது இந்திய அரசுதான்] இவ்வாறு மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்த புலிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரை முடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும்போது சிங்கள அரசை நம்பிப் போயிருக்கவில்லை. சர்வதேசம் தங்களுக்கு நியாயமான தீர்வொன்றை தருவதற்கு முன்வரும் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள்.
ஆனால் நடந்தது தலைகீழாகவே இருந்தது. சிறியளவிலான அதிகாரப்பகிர்வுக்குக் கூட சிங்கள அரசு தயாராய் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க, மறுபக்கத்தில் புலிகளை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்கள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு சர்வதேச நாடுகள் பலவும் உடந்தையாக இருந்தன. அதில் முக்கியமாக, கருணாவை புலிகளிலிருந்து பிரித்ததில் இந்தியாவின் "றோ" அமைப்பு பிரதான பங்கு வகித்ததை குறிப்பிட முடியும். ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு புலிகளை தடை செய்திருந்தது. தமிழர் தரப்பு சர்வதேசத்திடமிருந்தும் முற்றுமுழுதான ஏமாற்றத்தையே கண்டிருந்தது. மான்புமிகு தியாகங்களினால் ஈட்டப்பட்ட மாபெரும் இராணுவரீதியான வெற்றிகள் கூட தமிழருக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தர முடியாமல் வீணாகிப் போயின.
எனவேதான் , நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகளின் குறி இராணுவரீதியான வெற்றிகளிலிருந்து விலகி "சர்வதேச ஆதரவு" என்ற ஒன்றின் மீதே குறியாய் இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான விளைவுகளாய்தான் தற்போதைய நிலைமைகள் தொடர்கின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப்படுகின்ற விடயங்கள் அனைத்துமே உண்மையிலேயே புலிகளின் இராஐதந்திர காய்நகர்த்தல்களுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துவரும் முக்கியமான அம்சங்கள்.புலிகள் தமது இராணுவ வெற்றிகளைவிட சர்வதேச ரீதியிலான இராஐதந்திர வெற்றிகளே தமது இலட்சியமான தமிழீழம் எனும் தனிநாடு மிகவிரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இம்முறை தமிழர்தரப்பு தமது களத்தினை பிரதானமாக சர்வதேசத்திலேயே தொடங்கியிருக்கின்றது. "மக்களின் உணர்ச்சிமிக்க எழுச்சிகள் எப்போதும் இழப்புக்களினால் ஏற்படும் தாக்கங்களிலிருந்தே உருவாகும். இழப்புக்கள் அதிகமாகும் போது அது புரட்சியாகவும் மாறும்". அதற்கு ஏதுவாக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் அமைந்து வருகின்றன. புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் பின்வாங்கல்களை தமது மாபெரும் வெற்றிகளெனக் கருதி வெற்றி மமதையில் கண் மண் தெரியாமல் அப்பாவி மக்களை கொன்று குவித்து மிகப்பெரும் இனவழிப்புப் போரையே சிங்கள அரசு நடாத்தி வருகின்றது.
அகதிகளாகி அல்லற்படும் மக்களை அநியாயமாக கொன்றொழித்து வருகின்றது. அம்மக்களின் துயரங்களை வாயினால் சொல்ல முடியாது. எழுத்துக்களினால் வரித்திட முடியாது. காட்சிகளால் காண்பித்துவிட முடியாது.அந்தவலிகளை அந்த இடத்திலிருந்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், உலகத்தமிழருக்கு அவ்வலியின் கொஞ்சமேனும் புரிய ஆரம்பித்தது. வீறுகொண்டு பொங்கியெழுந்தார்கள். தற்போது பாதுகாப்பு வலயம் என்ற சிங்கள அரசின் மரணப்பொறிக்குள் அகப்பட்டிருக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேலான தம் உறவுகளை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆக்ரோஷமாய் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் சர்வதேசத்தின் கவனம் முழுவதையும் தம் பக்கம் இழுத்திருக்கின்றார்கள்.
பாதுகாப்பு வலயம் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்றது சிங்கள கொலைவெறி இராணுவம். ஆரம்பத்தில் பத்து இருபது என தினந்தோறும் படுகொலை செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதன்பின்பு நூற்றுக்கணக்காகி இப்போது தினமும் ஆயிரக்கணக்காகி இருக்கின்றது. அனைத்துலகத்தாலும் ஓரங்கட்டப்பட்ட பாவப்பட்ட ஒரு இனமாக அவலப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது ஈழத்தமிழினம். போர்விதிகளுக்கு மாறாக அப்பாவி மக்களை கேடயங்களாகப் பாவித்தும், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி தன் அழிவு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது சிங்கள இராணுவம்.
ஆனாலும் சர்வதேசம் அதை அசட்டை செய்யாமலேயே இருப்பதாகத் தெரிகின்றது. ஆயிரமாயிரம் மக்கள் கொல்லப்படுவதை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் கொடிய தாக்குதல்களிலிருந்து மக்களை காப்பாற்ற எந்தவொரு நாடும் அறுதியான நடவடிக்கையினை இன்றுவரை மேற்கொள்ளவில்லை. பலஸ்தீனத்தீனியர்கள் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இருபது நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச ஜாம்பவான்களால் அப்பாவித் தமிழ்மக்கள் மீது இத்தனை நாளாய் நடத்தப்படும் கொலைவெறித்தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்த இயலவில்லை??? ஈழத்தமிழினம் அழிந்து போகட்டும் என்று நினைக்கின்றதா இந்த சர்வதேசம்???
தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமையோ, ஆகக்குறைந்தது உயிரோடுதன்னும் வாழும் உரிமையோ ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லையா??? இவ்வாறான கேள்விகளோடு சர்வதேசங்களின் முன்றல்களில் குதித்திருக்கின்றார்கள் பேரெழுச்சிகொண்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள். இம்முறை சாக்குப்போக்குச் சொல்லி சர்வதேசத்தால் தட்டிக்கழிக்க முடியாத அளவுக்கு தமது போராட்டத்தினை வலுப்படுத்தி வருகின்றார்கள். அவர்களின் போராட்டங்களின் முதன்மையான கோரிக்கை "போரை உடனடியாக நிறுத்தி வன்னிமக்களை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் " என்ற மனிதாபிமான கோரிக்கைதான். அதைக்கூட நிறைவேற்ற சர்வதேசம் பின்னடிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
ஆனாலும் மக்கள் ஓயப்போவதாக தெரியவில்லை. தங்களின் கோரிக்கைகளுக்கு சர்வதேசம் இணங்கும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். அமைதியாக கேட்டுப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொறுமையிழந்த மக்கள் தமது போராட்டங்களை வேறு வடிவங்களுக்கு மாற்றத் தொடங்கியிருக்கின்றார்கள். வீதிமறியல்கள், சாகும்வரை உண்ணாவிரதம் என புதிய பரிமாணம் பெற்றுள்ளன போராட்டங்கள். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் சொல்லிவிட்டுப் போன தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நியமாவதனை மக்கள் போராட்டங்களின்போது அவர்கள் காட்டும் உணர்வெழுச்சிகளிலிருந்து உணர முடிகின்றது.
சிங்கள அரசு தானாக முன்வந்து தமிழருக்கான தீர்வைத் தரப்போவதில்லை என்பதை தமிழர் தரப்பு நன்கே உணர்ந்திருக்கின்றது. தமது இலக்கை அடைவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அத்தியாவசியம் என்பதனையும் ஏற்கனவே புரிந்துகொண்டுவிட்டனர். எனவே தமிழர் தரப்பின் போராட்டங்கள் சர்வதேசத்தினை நோக்கி தமது நியாயப்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமையத்தொடங்கியிருக்கின்றன.
புலிகளும் என்றுமில்லாதவாறு தமது போராட்ட வடிவத்தினை, பரிமாணத்தினை தந்திரோபாய ரீதியில் மாற்றிவருகின்றார்கள் என்றே தெரிகின்றது.அவர்களின் களங்கள் தற்போது மாற்றமடைகின்றன. தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்களோடு அவர்களின் களங்கள் சமாந்தரமாக பயணிக்கின்றதனை அவதானிக்க முடிகின்றது. புலிகளும், புலிகளையே ஏகதலைமையாக அறிவித்து புலம்பெயர் தேசமெங்கும் போராடும் மக்களும் ஒரே கோரிக்கையுடன் ஒரு இலட்சியத்துடன் சர்வதேசத்தினை நெருக்கத் தொடங்கி விட்டனர். மக்களின் எழுச்சி மயமான போராட்டங்களுக்கு சர்வதேசம் மதிப்பளிக்க தவறும் பட்சத்தில் அது புரட்சிமயமாக மாற்றமடையும் அதேவேளை, புலிகளின் அமைதிக்கும் பணிவுக்கும் தயவு காட்டாத சர்வதேசம் அதன் விளைவுகளை சிங்கள தேசத்தோடு சேர்ந்து அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சனைகளுக்கு சர்வதேசம் [முக்கியமாக பிரித்தானியா]அன்றிழைத்த தவறுகள்தான் காரணம். சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிகொண்டு தமிழரின் சுதந்திரத்தினை சிங்களவரிடம் அடகு வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.அவர்களால் இழக்கப்பட்ட சுதந்திரத்தினை மீட்டுத்தரும் கடமையும் கடப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு.அதை சர்வதேசத்திடம் அழுத்திக் கேட்கும் வரலாற்று உரிமை தமிழர்களுக்கு உண்டு. செய்தே ஆகவேண்டும் சர்வதேசம்.
தமிழன் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் சர்வதேசம் பதில் சொல்ல வேண்டிவரும். பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள் நிச்சயமாக அந்நிலையை சர்வதேசத்திற்கு ஏற்படுத்தும். தமிழ் மக்களின் புரட்சி உச்சக்கட்டத்தினை அடையும்போது புலிகளின் மெளனமும் கலையும். அப்போது எதிரியின் நிலைகளும் குலையும்.தமிழர்தம் இன்னல்கள் அனைத்தும் அகன்று, தமிழீழ தேசம் மலர்ந்து
சிங்கள வல்லாதிக்கத்தினதும், காந்தியக் காங்கிரஸினதும், சர்வதேச நாசகார சக்திகளினதும் கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
"உலகே! உனக்கு கண்ணில்லையா? எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா??
உலக மக்கள்தான் மக்களா??? தமிழீழ மக்களென்ன கற்களா???? "
-பருத்தியன்-
திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம்: அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்!!!

முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள்.
அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்கிற அமைப்பை இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் ஏற்படுத்தி, இது போன்ற ஈழத்தின்பால் நேசமும், பாசமும், பற்றும் கொண்ட பல்வேறு அமைப்பினர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி இருக்கிறார்கள்.
இதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் இயக்குநர் இமயம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தெக்கத்திப்பொண்ணு' என்னும் சீரியலை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தத் தயாரிப்பு அது.. இந்த நேரத்தில் கலைஞரை சிக்கலில் மாட்டிவிடும் வேலையை அவரே முன் நின்று செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது..
கடந்த 23-ம் தேதியன்று சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தின் திறந்த வெளியில் மாநாடு போல் பந்தல் அமைத்து மிகப் பெரும் அளவுக்கு ஈழத்து ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்திவிட்டார்கள்.
எப்போதுமே கலைஞர் எல்லாருக்கும் முந்தி தனக்குத்தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நினைப்புடையவர். பாரதிராஜாவின் இந்த போராட்டம் உலகம் முழுக்க தமிழர்களிடையே முழு கவனத்தையும் ஈர்க்கும் என்பதை உணர்ந்த கலைஞர் முதல் நாளே ஏதோ திடீர் ஞானதோயம் பெற்றவராக 23-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 12 மணி நேர பந்த் என்று அறிவித்திருந்தார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்களும், இளைஞர்களும் பெருவாரியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றாலும் கூட்டம் பந்தலையும் தாண்டி அமர்ந்திருந்தது எதிர்பார்க்காத ஆச்சரியம். இக்கூட்டம் பற்றிய எனது செய்திக் கட்டுரையை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். மேடையில் பேசியவர்களின் பேச்சில் எனக்கு நினைவில் இருப்பவைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.
கூட்டத்திற்கு வந்திருந்த இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மனோபாலா, அமீர், சேரன், மணிவண்ணன், பார்த்திபன், பாலுமகேந்திரா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, தங்கர்பச்சான், வெற்றிமாறன், வசந்தபாலன், ஜனநாதன், வி.சேகர், வசந்த், மனோஜ்குமார், யார் கண்ணன், சித்ரா லட்சுமணன், ஆர்.சுந்தர்ராஜன், ஈ.ராமதாஸ், கதிர், சசிமோகன், ரவீந்தர், ஆதி, போன்றோர். மேலும் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, முன்னாள் தலைவர் விஜயன், மற்றும் பெப்ஸி நிர்வாகிகளும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், கே.பாலு, ஏ.எல்.அழகப்பன், சோழா பொன்னுரங்கம், வசனகர்த்தா பிரபாகரன், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் போன்றோரும் வந்திருந்தனர்.
நடிகர்களில் சத்யராஜ், கஞ்சா கருப்புவும் காலை 8.30 மணிக்கே வந்திருந்து இறுதிவரையில் இருந்தனர். நாசரும் வந்திருந்து பேசிவிட்டுச் சென்றார். ஆனால் மதியம் 2 மணிக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு பாதியிலேயே பேசக்கூட இல்லாமல் ஓடிவிட்டார். நடிகைகளில் முதல் ஆளாக வந்தவர் புவனேஸ்வரி. பாரதிராஜாவின் 'தெக்கத்திப்பொண்ணு' சீரியலில் நடிப்பதால் இவரது வருகை ஆச்சரியமளிக்கவில்லை. தங்கர்பச்சானும், ரோகிணியும் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரை நேரில் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு இந்த மேடைக்கு வந்தார்கள்.
கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன், கவிஞர் மு.மேத்தா, புலவர் புலமைப்பித்தன், அருட்தந்தை ஜெகத்கஸ்பார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், வழக்கறிஞர் கருப்பன், த.வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி, தமிழருவிமணியன், ஐயா பழ. நெடுமாறன் என்று திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் பாரதிகிருஷ்ணகுமாரும், சேரனும் தொகுத்து வழங்கினார்கள். காலை 8.30 மணி முதலே வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க.. முதலில் பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கவிஞர் புலமைப்பித்தன்
“எம்ஜிஆர். ஆட்சிக் காலத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். இது பற்றி கலைஞரே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். ‘அரசவைக் கவிஞரும் எதிர்க்கிறாரே..' என்று.. அந்தக் கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் இப்போதைய கலைஞரை உங்களைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. கலைஞர் அவர்களே.. கூட்டணியை உடைத்துவிட்டு காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வாருங்கள்.. அதுதான் உங்களுக்கு அழகு..” என்று கலைஞருக்கு அட்வைஸ் செய்தார்.
மேலும், இந்திய அமைதி காப்புப்படையில் மேஜர் ஜெனரலாக இருந்த கர்ஹிரத்சிங் எழுதிய புத்தகத்தைப் படித்துக் காட்டினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது என்பதை ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனேவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து விளக்கினார். எம்.ஜி.ஆர். இந்திய ராணுவம் ஈழத்துப் பெண்கள் மீது நடத்திய அட்டூழியங்களை ராஜீவின் கவனத்திற்கு கொண்டு போனதையும், அவர் எரிச்சலடைந்து எம்.ஜி.ஆர். மீதே எரிந்து விழுந்ததையும் சுட்டிக் காட்டினார் புலவர்.
“ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்..? புறத்தே வெளுத்து, அகத்தே கருத்துள்ள சோனியாவே வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.. நாங்கள் பிரபாகரனை பிடிக்கின்றவரையில், அவனைக் கொல்கின்றவரையில் போரை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லிவிடுங்கள்.. அடுத்து நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்றார் கோபத்துடன்.
“பிரபாகரன்தான் தமிழ் இனத்திற்கு விடிவெள்ளி. அவன்தான் ஈழத்தமிழர்களின் தளபதி. அவனைத் தவிர தமிழர்களுக்கு வேறு நாதியில்லை..” என்று வெளிப்படையாகவே தனது ‘தம்பி' பாசத்தைக் காட்டிவிட்டுப் போனார் புலவர் புலமைப்பித்தன்.
இயக்குநர் மணிவண்ணன்
காலில் அடிபட்டு சில காலமாகவே நொண்டி, நொண்டி நடந்து வரும் இயக்குநர் மணிவண்ணன், இந்த உபாதையுடனேயே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஈழத்து விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
“சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்து அரசியல்வாதிகளை இலங்கைக்காரன் ஒருவன் ‘கோமாளிகள்' என்றான். அப்போது நான்கூட கோபப்பட்டேன். ஆனால் இப்ப நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அவன் உண்மையாத்தான் சொல்லிருக்கான்னு நினைக்கிறேன்...” என்றபோது பலத்த கைதட்டல் எழுந்தது.
“புலியை நான் நம்புகிறேன்.. புலியை எனக்குப் பிடிக்கும்.. புலியை நான் நேசிக்கிறேன்.. புலிகளை வாழ வைக்க வேண்டும்.. நான் புலிகளை ஆதரிப்பேன்.. ஏன்னா நம்மளோட தேசிய விலங்கே புலிதாங்க. நம்ம புலிக்கு நம்மளே சப்போர்ட் பண்ணலைன்னா வேற எவன்ங்க சப்போர்ட் பண்ணுவான்..? ஆகவே தோழர்களே.. நீங்களும் புலிக்கு சப்போர்ட் பண்ணுங்க.. புலி நம்மளோட பிரெண்டு.. பெஸ்ட் பிரெண்டு.. புலியே நமக்கு விடுதலை பெற்றுத் தரும். புலிகளை நம்புங்கள்.. புலிகளை ஆதரியுங்கள். நமக்கு விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்...” என்று தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு எழுந்த கை தட்டலால் அரங்கத்தை அதிர வைத்துவிட்டுப் போனார் இயக்குநர் மணிவண்ணன்.
சிவாஜிலிங்கம் எம்.பி.
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவாஜிலிங்கம் தனது பேச்சில் இலங்கை வரலாற்றை எடுத்துச் சொல்லியதோடு, இனப்பிரச்சினை எதனால் ஏற்பட்டது.. இதுவரையில் நடந்தது என்ன என்பது பற்றியெல்லாம் கூட்டத்தினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் எம்.கே.நாராயணனை சந்தித்தபோது அவர் “எங்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பாலமாக இருங்கள்” என்று தன்னிடம் தெரிவித்தையும் சொன்னார் சிவாஜிலிங்கம்.
“4000 விடுதலைப்புலிகள்தான் உள்ளனர் என்று சொல்லிவிட்டு 8000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாக சிங்கள இராணுவம் கணக்குச் சொன்னது. நான் இலங்கை நாடாளுமன்றத்திலே கேட்டேன்.. ‘4000 என்று சொல்லிவிட்டு இப்போது 8000 புலிகளை கொன்றுவிட்டதாகச் சொல்கிறீர்களே.. கணக்கு உதைக்கிறதே.. அங்கே சண்டையிட்டது புலிகள்தானா..? அல்லது ஆவிகளா..? பிசாசுகளா?' என்று கேட்டேன். அரசுத் தரப்பில் பதிலே இல்லை.
இங்கே ஒரு பிரச்சினை பேசப்பட்டு வருகிறது.. எமது போராட்டம் தீவிரவாதமா அல்லது இன விடுதலைப் போராட்டமா என்று.. இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் போன்றதுதான் எங்களது விடுதலைப் போராட்டம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டம் போன்றதுதான் எங்களுடையது.. அது போராட்டம் என்றால் எங்களுடையதும் போராட்டம்தான். பகத்சிங்கின் போராட்டமும் எங்களுடையது ஒன்றுதான். இது போன்றதுதான் பிரபாகரன் தலைமையில் நாங்கள் நடத்தும் போராட்டம். இதில் வித்தியாசம் ஏதுமில்லை.
ஒட்டு மொத்த ஈழத்து தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான்.. வேறு யாருமில்லை.. அவர்களால் மட்டுமே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர முடியும். அவர்களைத்தான் உலகத்தில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களும் நம்புகிறார்கள். தமிழகத்து மக்கள் எமது ஈழ விடுதலைக்காக எத்தனையோ தியாகங்களையும், உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால் ஈழத்தில் எமது வம்சம் இருந்ததா என்பதை வருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்.. எதையாவது செய்யுங்கள்...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
நடிகர் சத்யராஜ்
“தமிழ் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி இன்றைய ஈழத்து வாரிசுகளுக்கு தெரியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 20 வயதான இளைஞர்களும், பெண்களும்தான் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்தப் போர் வெற்றியடையும்வரையில் ஓயாது என்றே நினைக்கிறேன்..” என்றவர் அன்றைய குமுதம் பத்திரிகையில் அரசு பதில்களில் இருந்த ஈழம் தொடர்பான கேள்வி-பதிலை படித்துக் காட்டினார். ஆனாலும் சத்யராஜின் அன்றைய பேச்சில் ஆவேசம் சற்று மிஸ்ஸிங்தான்.
கவிஞர் தாமரை
இந்த போராட்ட மேடையின் ‘கலரையே' மாற்றியவர் இவர்தான். இவருடைய பேச்சிற்குப் பின்புதான் பேச்சாளர்கள் அனைவரும் நேரடியாக கலைஞர், சோனியா, ஜெயலலிதா மூவரையும் வெளுத்துக் கட்டினார்கள். அந்த வகையில் தாமரையக்காவுக்கு ஒரு ‘ஜே' போட்டுக்குறேன்..
“நீங்க எப்படியோ தெரியலை.. ஆனா என்னால என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஈழத்தில் நடைபெறும் கோரச் சம்பவங்களின் புகைப்படங்களை பார்த்தபோது எப்படி என்னை அடக்கிக் கொள்வது.. என்ன பேசுவது என்பதே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நம்மளால எப்படி அதைத் தாங்கிக்க முடியும்.. சொல்லுங்க..
இப்ப இந்த திரையுலகக் கலைஞர்கள் எல்லாரும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர். நான் அப்படியில்லை.. எதையும் வெளிப்படையாப் பேசுவேன். தமிழ் ஒரு இனம். மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்..? இதைக் கேட்டால் ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறேன்' என்கின்றனர். சின்னதாகக்கூட என் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப கோபம், கோபமாக வருகிறது..
இந்த நேரத்தில்தான் அப்படி, இப்படி என்று தனது சீட்டில் உட்கார்ந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாரதிகிருஷ்ணகுமாரை அழைத்து ஏதோ சொல்லியனுப்ப கிருஷ்ணகுமார் துண்டு சீட்டை தாமரையிடம் கொடுக்க.. புரிந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசையினர் எழுந்து சத்தம் போட.. ஆளாளுக்கு எழுந்து நின்று தாமரையக்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.. தொடர்ந்தும் பேசினார் தாமரை.
‘ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி பேச முடியாது..' என்கிறார் கலைஞர். இலங்கை பிரச்சினையில் இங்குள்ள மக்கள் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று சொல்லலாம்.. முதல்வராக இருக்கும் கலைஞர் ‘என்னால் முடியாது' என்று சொல்லலாமா..? பின்பு எதற்கு அவருக்கு முதலமைச்சர் பதவி..? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.
ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால், கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள்..” என்று ஆவேசத்துடன் சொல்ல.. எழுந்த கை தட்டல் ஜெமினி பாலத்தையே சற்று அசைத்திருக்கும் என்று நினைக்கிறேன். பொறுத்துப் பார்த்த பாரதிராஜா எழுந்து வந்து தாமரையிடம் ஏதோ சொல்ல.. தாமரை “நான் இன்னும் பேசணுமே ஸார்..” என்றார் அதே வேகத்தோடு.. பாரதிராஜா பதிலுக்கு ஏதோ சொல்லப் போக.. கூட்டம் மொத்தமும் எழுந்து சவுண்டு விட்டது.. “பேச விடுங்க.. பேச விடுங்க..” என்று சத்தம் நாலாபுறத்திலிருந்து மேடையை நோக்கி வர.. ஆனாலும் மேடை நாகரிகம் காரணமாக தாமரை தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
கவிஞர் சினேகன்
கலைஞரை வெளுத்து வாங்கினார் இந்தக் கவிஞர். “போயும் போயும் அந்த இத்தாலிக்காரிகிட்ட போய் எங்களைக் கெஞ்ச விட்டுட்டீங்களே கலைஞர் ஐயா.. இது உங்களுக்கே நியாயமா..?” என்றபோது கைதட்டல் தூள் பறந்தது..
இயக்குநர் கவிதாபாரதி
மக்கள் தொலைக்காட்சியில் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி ஒளிபரப்பாகி வரும் தொடரின் இயக்குநரான கவிதாபாரதி துவக்கத்தில் மேடையிலேயே கதறி அழுதார். இளங்கோவனை பற்றிப் பேசும்போது “அவர் பெரியாரின் நிஜ பேரனல்ல.. போலி பேரன்.. அந்த இன்ஷியலைப் போட்டுக் கொள்ளும் தகுதியே அவருக்கில்லை.. பெரியாரின் உண்மையான பேரன் முத்துக்குமார்தான்” என்றார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
“என் வாழ்க்கையில இதுவரைக்கும் இரண்டு முறைகள்தான் மிக, மிக வருத்தப்பட்டிருக்கிறேன்.. ஒன்று நான் பள்ளியில் படித்து வரும்போது நிகழ்ந்த மகாத்மாகாந்தியின் மரணம்.. இன்னொன்று சமீபத்தில் முத்துக்குமாரின் மரணத்தின்போது..” என்றவர், “நடந்து வரும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல.. ஈழத்தை, ஈழத்து மக்களை அன்னை பராசக்திதான் காப்பாற்ற வேண்டும்..” என்றார்.
த.வெள்ளையன்
“முத்துக்குமாரோடு சேர்ந்து இதுவரையில் 13 பேர் தீக்குளித்து மாண்டிருக்கிறார்கள். இன்னமும் மத்திய அரசும், மாநில அரசும் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.. இந்திய ராணுவத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை மட்டும் தனியே பிரித்து எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. தனி ஈழத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. இனி எதற்கும் உங்களிடம் வந்து கேட்க மாட்டோம்.. கையேந்த மாட்டோம்.
கலைஞர் அவர்களே.. உடனடியாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள். அப்போதுதான் நீங்களே உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர் பட்டம் உங்களுக்குப் பொருந்தும்.. இல்லாவிடில் ‘தமிழினத் துரோகி' என்ற பெயர்தான் கிடைக்கும்..” என்றபோது அதை ஆமோதிப்பதைப் போல் கரகோஷம் கிளம்பியது.
கடைசியாக பேச்சை முடிக்கும் போது மீண்டும் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தவர், “கலைஞர் அவர்களே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள்.. இல்லாமல் அந்தக் கூட்டணியில்தான் இருப்பேன். கொஞ்சுவேன் என்று இருந்தால், அந்த பாழாப் போன காங்கிரஸோடு சேர்ந்து நீங்களும்..” என்று சொல்லி வார்த்தையை முடிக்காமல் தலைக்கு மேல் இரு கரங்களையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டுப் போக ‘அர்த்தம்' புரிந்து ஆர்ப்பரித்தது அரங்கம்.
பேசி முடித்துவிட்டு தனது சீட்டுக்கு வந்தமர்ந்த வெள்ளையனிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்கள் பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும்.
அருட்தந்தை ஜெகத் கஸ்பார்
“இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து என்ன செய்வது? டெல்லியின் கவனத்தை எப்படி நாம் ஈர்ப்பது..? அவர்களை எப்படி அசைய வைப்பது.. நம்முடைய இது மாதிரியான போராட்டங்கள் எல்லாம் டெல்லி மத்திய சர்க்காரை எதுவும் செய்யாது.. வேறு மாதிரிதான் செய்ய வேண்டும்.. நாம் போராடி முடிப்பதற்குள் அங்கே கடைசித் தமிழனையும் முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. தமிழ்த் திரையுலகத்தினருக்கு மட்டுமே இந்த ஈழப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கும் திறமையும், உரிமையும், கடமையும் இருக்கிறது. இதனை அவர்கள் உறுதியுடன், உண்மையாகச் செய்ய வேண்டும்..” என்றார்.
இவர் பேசும்போது ‘இவர் கனிமொழியின் நண்பர்' என்பதைச் சொல்லி அரங்கில் நான்கைந்து பேர் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.
பெ.மணியரசன் (தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர்)
“தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் இழுத்துப் பூட்ட வேண்டும்.. அலுவலகங்கள் இயங்கவிடாமல் செய்ய வேண்டும்.. மத்திய அரசின் இயந்திரங்கள் எதுவும் தமிழ் மாநிலத்திற்குள் செயல்படக்கூடாது. அறவே நிறுத்தவேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஓடோடி வரும். இதுதான் நமது அடுத்தக் கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்..” என்றார் இவர்.
இந்த நேரத்தில் சென்னையில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் போராட்ட அமைப்பினர் மேடைக்கு வந்தார்கள். அவர்கள் மேடைக்கு வரும்வரையிலும் மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கை தட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் அமைப்பினர் மேடைக்கு வந்து அமர்ந்த பின்புதான் கூட்டமும் அமர்ந்தது.
பெண்கள் அமைப்பின் சார்பில் சந்திரா
“நாங்கள் கடந்த 11 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசும், மாநில அரசும் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அங்கே நம் இனப் பெண்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.. இப்போது நீங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். இது நல்லதொரு திருப்பம். இதனை நீங்கள் கடைசிவரையிலும் கைவிடாமல் தொடர வேண்டும்..”
‘கருப்புக் குரல்' நாடகம்
இதன் பின்பு சீமானிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து ‘கருப்பு குரல்' என்றொரு நாடகத்தை நடித்துக் காட்டினார்கள். இந்நாடகத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
ஏற்கெனவே மகனையோ, மகளையோ இழந்திருந்த அந்த வீட்டுப் பெரியவருக்கு இதனாலேயே மனநிலை பிறழ்ந்து எப்போதும் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “ஐ.நா. படைகள் வந்துவிட்டதா..? ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டதா..?” என்று கேட்டபடியே இருக்கிறார்.
அப்போது இருக்கின்ற மகனும் குண்டடிபட்டு வருகிறான். கதறி அழுகிறார்கள். அதுதானே முடியும்.. மருமகனைத் தேடி வரும் சிங்கள ராணுவம் அவனை புலி என்று நினைத்து சித்ரவதை செய்கிறது. ஒரு கட்டத்தில் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “நான் புலிதான்.. நான் புலிதான்..” என்று கத்துகிறான் அவன். ராணுவம் அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டுப் போகிறது. குடும்பத்தினர் இப்போது கதறி அழுகிறார்கள்.
உடனேயே ஓடி வருகிறார் ‘மஞ்சள் துண்டு' அணிந்த பெரியவர் ஒருவர்.. “நான் மஞ்சள் கட்சிக்காரன். நான் ஐ.நா.வுக்கே தந்தி அடிச்சிருக்கேன்.. சீக்கிரம் நல்லது நடக்கும்..” என்கிறார். “இந்த இடத்தில் முதல் மரியாதை செய்ய தனக்கே முதல் உரிமை இருக்கிறது..” என்கிறார்.
அடுத்து வருகிறார் ஒரு நீண்ட துண்டு அணிந்தவர். “நான் கருப்பு கட்சிக்காரன்.. நான்தான் ஆதிக்காலம் தொட்டே இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி வருகிறேன். எனவே எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.
அடுத்து வரும் ரோஸ் கட்சிக்காரர் “நான்தான் உண்மையான தமிழன். தனக்குத்தான் முதல் உரிமை..” என்றும் சொல்கிறார்.
கடைசியாக வரும் ஒருவர் “நான்தான் உண்மையான தம்பி.. சீறுகின்ற தம்பி.. எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.
கடைசியில் நால்வரும் கலந்து பேசி, ஒன்று சேர்ந்து அந்தப் பிணத்திற்கு மாலை அணிவித்து சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ரேடியோவில் செய்தி ஒளிபரப்பாகிறது தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று.. சடலத்தை மெது, மெதுவாக கீழே வைத்தவர்கள் ஓடோடிப் போய் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள்.
ஒருவர் மாற்றி ஒருவர் பேசுகிறார்கள். இங்கே பின்னணியில் பிணத்தின் அருகே குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேரங்கள் முறிந்து போக.. ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து இருவர், இருவராக கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்.
அப்போது எங்கிருந்தோ வரும் சிலர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து “இவர்கள் யாரும் நமக்கு வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம்.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி நாங்கள்தான் செயலாற்றப் போகிறோம்..” என்று சொல்லி பிணத்திற்கு மாலை அணிவித்து தூக்கிச் செல்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாடகம் முடிகிறது.
இந்த நாடகத்தில் அந்த 4 அரசியல்வாதிகள் யார், யார் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால் ஏக ரெஸ்பான்ஸ்.. பலத்த கரவொலி. அற்புதமான நடிப்பு. மிகக் கச்சிதமாக தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு ஏற்றாற்போல் வசனமெழுதி நடித்துக் காண்பித்திருக்கிறார்கள் துணை இயக்குநர்கள். பாராட்டுக்கள்..
வைகைப் புயல் வடிவேலுவின் எஸ்கேப்
இந்த நாடகம் துவங்குவதற்கு முன்புதான் நடிகர் வடிவேலு மேடைக்கு வந்தார். பாரதிராஜா எழுந்தோடி போய் அவரை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார். நாடகத்தை மேடையின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாடகம் முடிந்ததும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். வடிவேலுவின் இந்த ஜூட் பாரதிராஜாவுக்குத் தெரிய வர.. மனிதர் டென்ஷனாகிவிட்டார். ஆனாலும் பின்பு பேச வந்த அமீர் விடவில்லை. தனது பேச்சின்போது வடிவேலுவைப் போட்டுத் தாக்கிவிட்டார்.
இயக்குநர் யார் கண்ணன்
இவர் தனது பேச்சினை தனது கணீர்க் குரலில் கவிதையாகவே வடித்துவிட்டார். அந்தக் கவிதை இது..
"சமுத்திரத்தின் நடுவே தமிழன் வடித்த கண்ணீர்ச் சொட்டு இலங்கையாகிக் கிடக்கிறதா..?
ஒவ்வொரு மறை அச்சடிக்கப்படும்போதும் உலக வரைபடத்தில் இலங்கைக்கு மட்டும் இன்னும் இரத்த நிறம்தானா..?
இது மனிதனை மனிதனே விரட்டும் மஞ்சுவிரட்டு.. இனவெறித் தீயில் விறகுகள் மட்டுமா..? பானைகளே பற்றி எரியும் பயங்கரம்.
நீரில் நீந்தும்போது நனையாத இந்தத் தீவு போரின் தீயில் மூழ்கிப் போனதா..?
இலங்கையில் மட்டும் வருங்கால மாணவர்கள் வரலாறு படிக்கும்போது இன்னும் எத்தனை ஆண்டுகள் இறந்த காலமும், இறக்கும் காலமும் நிகழ்காலமாய்த் தெரியும்..?
சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கவில்லை.. வீதி சமைத்துக் கொண்டிருக்கிறது தமிழனை..
திசைதோறும் உலக அமைதிக்காகப் போதித்தவனின் திருச்சபையில் ஒப்பாரி உலா.
சாஸ்திரிய சங்கீதத்தின் மேனியில் ராப்பகலாய் பறைக்கொட்டு..
ராவணன் ராகம் வளர்த்த ராஜ்ஜியத்தில் அபஸ்வரங்களின் ஆட்சி..
பெயர்த்தெடுத்து வந்த அடுத்தவர் மனைவியிடம்கூட அவன் தோற்றுவித்த தொடா நாகரீகம் மண்ணில் உயிர்த்து வளர்ந்தவர்களிடம் மரித்துப் போனது.
மெளனமற்றுப் பபேன மயான பூமியே.. உனது வானொலி தமிழைச் சவைத்தது - நீ தமிழர்களைச் சுவைத்துவிட்டாய்..
தேசத்தின் திசை எங்கும் உட்கார்ந்திருக்கிற கரம் இலங்கை அரசின் இதயத்தைவிட்டு எப்போது வெளிநடப்பு செய்தது..?
ஒரு இலக்கியச் சீதையின் கற்பு காக்கப்பட்டபோது அது அசோக வனம் - இன்று சோக வனம்..
இந்த மனித இனத்திற்கு குண்டு துளைக்காத உடை.. விஷம் கலக்காத காற்று.. உயிர் பறிக்காத உறைவிடம்.. தர உத்தரவாதம் யார்..?
புராதன ஜடாயுக்களின் புனிதம் போய் - மனிதம் பிணந்தின்னிக் கழுகுகளின் பெரும் பிடியில்..
இது அஹிம்சையை போதித்த புத்த பூமியை இல்லை ரத்தத்தால் எழுதப்பட்ட யுத்த பூமியா..?
மானுடத் தீப்பெட்டியில் குச்சிகளைக் குச்சிகளே கொளுத்தும் கொடூரம்..
போர்ச்சத்தத்தில் பூக்கள் சுமந்த மரங்களின் கருச்சிதைவு..
மலடாகிப் போனது மண்ணின் செடி, கொடிகள்..
படுகொலையைப் பயிர் செய்து பாத்தி கட்டி உயிர் அறுவடைகள்..
சடலங்களையே கரையாக்கி சமுத்திர அலையோட்டம் சாவின் துர்நாற்றம்..
தன் ஆவியைக் கூவி விற்று ஆயுளையே பசிக்குத் தின்னும் தமிழனுக்கு - கடல் நீரின் நுரைப்பூக்கள் மட்டுமே கரை ஒதுங்கி கண்ணீர் அஞ்சலி..
அங்கு மட்டும் கடல் நீரின் நிறம் சிவப்பு.. உப்பும் கசக்கிறது..
இமயம் இன்று குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
இயக்குநர் இமயம் இன்று தமிழ்க் குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
எழுத்தும் பாட்டும் இயக்கமும் சேர ஈழம் வென்றதடா..!
உழைப்பவர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார் உணரட்டும் மத்திய அரசு..!
ஒவ்வொரு தமிழனின் விரல் நுனிமையும் ஓட்டு ஆட்சியைப் புரட்டும் முரசு..!
உலகத் தரத்துக்கு படமெடுக்கும் திரை உலகே! கலகத் தரக்கரை வேர் அறுக்க பொறுப்பு இருக்கு உனக்கும்.. பொறுப்பு இருக்கு உனக்கும்..!
வன்முறை வேண்டாம் என்பதற்காக எத்தனைப் படங்கள் எடுத்தோம் நாம்! வறுமையும் பசியும் போவதற்காக வழிகள் சொல்லிக் கொடுத்தோம் நாம்..!
என் தமிழ் இயக்குநர் இந்திவரைக்கும் வென்றது தமிழன் வெற்றியடா! நல்லதும் கெட்டதும் சொல்கிற நாமே நாளைய உலகின் தொட்டிலடா! தர்மம் வெல்லும் என்னும் முடிவை படங்களில் வடித்தவர் நாம்..?
அதர்மம் மத்தியில் ஆண்டு கொண்டிருந்தால் எப்படிப் பொறுப்பது நாம்..?
தமிழனை வைத்து தமிழால் உயர்ந்தோம்! தமிழனை ஏன் மறந்தோம்-ஈழத் தமிழனை ஏன் மறந்தோம்? உண்டும், உறங்கியும் வாழ்வது என்றால் இருந்தும் நாம் இறந்தோம்..! இருந்தும் நாம் இறந்தோம்..!
ஓட்டு ஆயுதம் கைகளில் இருக்கு உணரட்டும் மத்திய ஆட்சி..!
ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்போதும் தலைமை மாறும் காட்சி..!
அத்தனை பேரும் முடிவெடுப்போம்! அநீதியைத் தடுப்போம்! ஆட்சியில் இருக்கும் கைகளை முறித்து விடுதலை நாம் கொடுப்போம்-ஈழ விடுதலை நாம் கொடுப்போம்..”
தமிழருவி மணியன்
“நான் வணங்கும் பெரியவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பழ.நெடுமாறன். இன்னொருவர் நல்லகண்ணு..
வாழிய தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. என்ற பாரதியின் கூற்றை காங்கிரஸார் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் மொழியின் மீது பற்று வேண்டும். அதற்குத்தான் ‘வாழிய தமிழ்' என்றான் பாரதி. பின்பு அந்த மொழி பேசும் தமிழரின் வாழ்வு சிறக்க வேண்டும் என்கிறான். பின்பு மூன்றாவதாகத்தான் ‘வாழிய பாரத மணித்திருநாடு' என்கிறான். இது கூடத் தெரியாமல் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர். இவர்களுடைய நாடக நடிப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினேன்.
இந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது என்ன நேர்ந்தது..? வைகோ 4 தொகுதிகளில் நின்று ஜெயித்துவிட்டால் தனி ஈழம் கிடைத்துவிடுமா..? ராமதாஸ் 7 தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் ராஜபக்சே மண்டியிட்டுவிடுவானா..? சிறுத்தைகளைப் பாருங்கள்.. ‘அடங்க மறு.. அத்து மீறு..' என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு இப்போது ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்'னு விவேக் பேசுற வசனம் மாதிரி போயி நின்றுக்காங்களே.. இவங்களையெல்லாம் என்ன செய்யறது..?
மத்திய அரசுகளை அசைக்க வேண்டும். அவர்களை நம்மைத் தேடி ஓடிவர வைக்க வேண்டும்.. அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.. இப்படிச் செய்தால் தமிழன் என்றோர் இனமுண்டு.. அவனுக்கோர் தனியோர் குணமுண்டு.. என்பதை உலகத்துக்குக் காட்டினால் மத்திய அரசும், கட்சிகளும் ஓடோடி வருவார்களே.. அப்போது நாம் பேசுவோம்.. நம்மிடம் இருக்கும் வாக்கு வித்தையைக் காட்டுவோம்.. ‘எமக்கு ஈழத்தை வாங்கித் தந்தால் ஓட்டுப் போடுவோம்' என்போம். இதுதான் ஒற்றுமை உணர்ச்சி.. இதுதான் இப்போதைக்கு நமக்கு வேண்டாம். அந்த உணர்வு இருந்தால்தான் நம்மால் ஜெயிக்க முடியும்..” என்று ஒரு நீண்ட பேருரையை ஆற்றினார்.
அருமையான தமிழ். சும்மா அருவி மாதிரி கொட்டியது இவரிடமிருந்து..
திருச்சி வேலுச்சாமி
“நான் பரம்பரை காங்கிரஸ்காரன்.. என் அப்பா காங்கிரஸ்காரர். என் அம்மாவும் காங்கிரஸ்தான்.. என் மனைவியும் காங்கிரஸ்காரி. மாமனார் காங்கிரஸ்காரர்.. என் தம்பி காங்கிரஸ்காரன். வார்டு உறுப்பினர். அவன் மனைவியும் காங்கிரஸ்காரிதான்.. பழனி பக்கத்துல ஊராட்சி மன்றத் தலைவி.. என் தாய்மாமன் காங்கிரஸ்காரன்.. அவன் குடும்பமும் காங்கிரஸ்காரர்கள்தான்.. எனது சொந்த பந்தங்கள் அனைத்துமே காங்கிரஸ்தான். ஆனாலும் சொல்கிறேன்.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும்..” என்றபோது எழுந்த கைதட்டலில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
“ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை அடைந்து 18 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதன் விசாரணை நேற்று நடந்தது. படுகொலை தொடர்பாக விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் குழுவான ஜெயின் கமிஷன் இரண்டு பேரைக் குறிப்பிட்டு அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த இரண்டு பேர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திராசுவாமி.. ‘சிபிஐ அவர்களை விசாரித்ததா?' என்றார் நீதிபதி.. ‘இல்லை..' என்றார் சி.பி.ஐ. வக்கீல். ‘ஏன்..? இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..?' என்று கேட்டார் நீதிபதி. பதில் இல்லை. ‘இரண்டு வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் விசாரிக்கவில்லை..' என்பதனை எழுத்துப் பூர்வமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..” என்று தனது வழக்கு பற்றிய செய்திகளையும் சொன்னார்.
அதோடு கூடவே ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமாக சுப்பிரமணியம்சுவாமி முந்திரிக்கொட்டையாக சொன்ன, ‘புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்' என்கிற தகவலையும் சொல்லி சுப்பிரமணியம் சுவாமி மீதான தனது சந்தேகத்தை இங்கேயும் பதிவு செய்தார்.
இயக்குநர் அமீர்
சீமான் இல்லாத குறையைப் போக்கினார் அமீர். மேடைப் பேச்சு போன்று இல்லை என்றாலும் சுவையாகவும், சூடாகவும் இருந்தது..
“இங்கே நடிகர்கள் பலரும் வரவில்லை. ஆனால் வரவேண்டியவர்கள்தான் வந்திருக்கிறார்கள். தமிழ் என்ற உணர்வு, தமிழன் என்ற உணர்வு இல்லாதவர்கள்தான் வரவில்லை.
‘மானாட மயிலாட' நிகழ்ச்சி போன்று போட்டிகள் நடத்தினால் நடுவராகச் செல்வதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பார்கள். நட்சத்திரங்கள் என்றாலே மின்னி மறைபவர்கள் என்றுதான் பொருள். மின்னல் வேகத்தில் வருவார்கள்.. அதே வேகத்தில் திரும்ப போயிருவாங்க.. அவங்க படத்தோட வேலைன்னா உடனே வருவாங்க.. இது அவங்களோட வேலையில்லையே.. அதுனால அவங்க யாரும் வரலை..
இங்ககூட ஒரு நடிகர் வந்தாரு.. இப்ப நடுவுல திடீர்ன்னு ஓடிட்டாரு.. நீங்களும் இனிமே அந்தப் புயலு.. இந்தப் புயலுன்னு எவனையாவது சொன்னா நம்பாதீங்க..
சோனியா நமக்கு அன்னையா..? நமக்கு அன்னை என்றால் அது இந்திராகாந்திதான்.. சோனியா நமக்கு அன்னை அல்ல.. சித்தி.. ரெண்டாம்தாரம். கொல்லைப்புறமாக வந்தவர்.. சித்தி கொடுமை.. சித்தி கொடுமைன்னு சீரியல்லேயும், சினிமாவுலேயும் நாம பார்த்திருப்போம். இப்ப நேராவே.. நிஜமாவே நாம அனுபவிக்கிறது இந்த சித்தி கொடுமையைத்தான்..
பிரணாப் முகர்ஜிக்கு தமிழினத்தை பத்தி, தமிழர்களோட வலியைப் பத்தி என்ன தெரியும்..? ராணி முகர்ஜிக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவனுக்குத் தெரியும்.. நம்மளைப் பத்தி என்ன தெரியும் அவனுக்கு..?
இதைப் பேசாத.. அதைப் பேசாத.. அப்படிப் பேசாத.. இப்படிப் பேசாத.. பேசினா இறையாண்மைக்கு எதிரா பேசுறன்னு சொல்லி உள்ள தூக்கிப் போடுறீங்க..? இதோ இப்ப தூக்கிப் போட்டீங்க.. என்னாச்சு.. கோர்ட் உங்களைக் கிழிக்கலை..
இனிமே தேர்தல்ல ஜெயிச்சு டெல்லிக்குப் போனீங்கன்னா வெளியுறவுத் துறை கேளுங்க.. ராணுவத் துறை கேளுங்க.. உள் துறையைக் கேளுங்க.. ஏன் லம்பமா காசு அள்ளுற துறையா கேக்குறீங்க..?
இப்ப இவுங்க என்னடான்னா ‘அவங்களைக் கேக்கணும்'.. ‘இவங்களைக் கேக்கணும்'ன்றாங்க. உங்ககிட்ட கேக்காம வேற யார்கிட்ட போய் கேக்குறது? ஜப்பான்காரன்கிட்டயா கேக்க முடியும்..? ஓட்டுப் போட்டது உங்களுக்கு..? தந்தி அடிக்கிறது ஐ.நா.வுக்கா..?
பக்கத்துல ஈழத்துல இருக்கிறவன் எனது சகோதரன்.. சொன்னா, ‘அப்படிச் சொல்லாத'ங்குறான்.. எங்கயோ 30000 மைல் தூரத்துல இருந்து வந்தவளை ‘அன்னை'ன்னு கூப்பிடும்போது, 30 மைல் தொலைவுல இருக்கிறவனை ‘சகோதரன்'னு கூப்பிடாம என்னன்னு கூப்பிடறது..?
இயக்குநர் சேரன்
"மானமுள்ள தமிழர்கள் எல்லாரும் இங்க வந்திருக்காங்க.. இல்லாமல் போய் வராதவங்களைப் பத்தி நமக்குக் கவலையில்லை..
இப்படியே எத்தனை நாளைக்கு பேசி, பேசி கலைஞ்சு போறது.. எதாவது செய்யணும்..? நாங்க தயாரா இருக்கோம்.. டசினிமாவைத் தூக்கிப் போட்டுட்டு வாடாடன்னு உடனே இப்பவே வரோம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க.. ஒரு நிமிஷம்கூட கண்ணை மூட முடியலீங்க.. நெட்ல பாருங்க போட்டோவையெல்லாம்.. பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு கொடூரமா கொல்லப்பட்டிருக்காங்கன்னு.. ரெண்டு கையும் இல்லாத ஒரு பொண்ணை கைப்புள்ளைக்கு பால் கொடுக்க கஷ்டப்படுறதை பார்க்கும்போது நெஞ்சு வெடிக்குதய்யா..
தமிழனை வாழ விடு.. தமிழன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடு.. இல்லைன்னா எங்களைத் தனியா விடு.. இதுதான் எங்களுக்கு வேணும்.. சும்மா சும்மா ‘இந்தியா' ‘இந்தியா'ன்னு கும்பிடு போட்டு உக்கார, எங்களால இனியும் முடியாது. இன்னிக்கு இங்கேயே ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. பாரதிராஜா ஐயா.. எடுப்பார்.. எடுக்கணும்.. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்..
இயக்குநர் இமயம் பாரதிராஜா
பலத்த கரவொலிக்கிடையிலும், எதிர்பார்ப்புக்கிடையிலும் மைக்கைப் பிடித்தார் பாரதிராஜா.
“எனக்கு பதவி முக்கியமல்ல.. இந்த பாரதிராஜா எந்தப் பதவிக்காகவும் இந்த இயக்கத்தைத் துவங்கவில்லை.. எனக்கு நாற்காலி கனவு கிடையாது. தமிழன் என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது.
தனது குஞ்சுகளைக் காக்கின்ற கோழியைப் போல இனமானத்தைக் காப்பதற்காக மிகப் பெரிய நாட்டின் ராணுவத்தை எதிர்த்து, ஒரு இயக்கத்தை ஆரம்பித்து எதிர்த்து ஜெயிக்கிறான் எனது ஈழத் தமிழன்.
உனக்கு இது கேவலம்.. உன்னால் முடியாத காரணத்தால்தான் இந்திய அரசு பேடித்தனமாக, கள்ளத்தனமாக, கொல்லைப்புறமாக ஆயுதங்களையும், தளவாடங்களையும் இலங்கைக்குக் கொடுத்து உன்னை ஜெயிக்க வைக்கிறது.. இல்லாவிட்டால் உன்னால் ஜெயிக்க முடியுமா..? இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. நமது இந்திய அரசுதான் உதவி செய்து வருகிறது..
சோனியாவை விமர்சித்தால் ‘தேச விரோத குற்றம்' என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கிப் போட்டாலும் கவலையில்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
முத்துக்குமார் மரணத்தின்போது அந்த மேடையில் அரசியல் கட்சியினர் பலரும் இருந்தனர். அனைவரிடமும் நான் கேட்டுக் கொண்டேன்.. “உங்களுடைய அரசியல் கொள்கைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, கட்சி அடையாளங்களை தொலைத்துவிட்டு ‘ஈழம்' என்கிற ஒரே கூரையின்கீழ் ஒன்று சேருங்கள்.. நாங்கள் அத்தனை பேரும் பின்னாலேயே ஓடி வருகிறோம் என்றேன்.. ஒருவரும் வாய் திறக்கவில்லையே.. ஆனால் இப்போது நெடுமாறன் ஐயாதான் தனி மரமாக நிற்கிறார். அந்த நாடகத்தில் நான்கு பேர் பிணத்தைப் போட்டுவிட்டு ஓடியதைப் போல அவர்களும் ஓடிவிட்டார்கள்.
நானும் ஆரம்பத்தில் அகநானுறு, புறநானுறு போன்றவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். தமிழ்நாட்டுப் பொண்ணு புலியை முறத்தால் அடித்து விரட்டியதையெல்லாம் படித்திருக்கிறேன். அது போன்ற வீரத்தை நான் பிரபாகரனிடத்தில்தான் பார்த்தேன்.
இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாகக் கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது.. செயலில்தான் காட்ட தெரியும்.
தமிழ் ஈழத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் ஒரு முதிய பெண் என்னைச் சந்தித்து கதறி அழுதார். ‘ஐயா இந்த ஈழத்துல இதுவரைக்கும் பிச்சைக்காரங்களே இருந்ததில்லைய்யா.. இப்ப எங்கட மக்கள் அத்தனை பேரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிட்டாங்களேய்யா..' என்று கதறினார். பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரர்களே கிடையாது..
ஈழத்து மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெற்ற தாயாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். பெற்றவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். உற்றத் தோழனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.. இரண்டு தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்..
முதல் தீர்மானம்..
இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப் போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.
இருந்தபோதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது. அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது.
தமிழர்களின் வாழ்வை, உயிரைக் காப்பாற்றத் தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளைக் கேட்கும் தார்மீக தகுதியில்லை என்று நாங்கள் ஒரு மனதாகச் சொல்கிறோம். போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமித்தக் குரலில் முன் மொழிகிறோம்.
இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை, எந்தெந்த முறையிலெல்லாம் காட்ட வேண்டுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்..
இரண்டாவது தீர்மானம்
தமிழ் ஈழத்தின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொச்சைப்படுத்தியும், உதவி செய்ய முன்வராத தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய மூவரின் தொகுதிகளிலும் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..”
என்று எதிர்பார்க்காத முடிவுகளைச் சொல்லி அசத்திய இயக்குநர் இமயம் கடைசியாகச் செய்ததுதான் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. “எனக்கு இந்தத் தமிழகம் எத்தனையோ விருதுகளை ஏற்கெனவே வழங்கிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதனைத் தூக்கியெறிய முடிவு செய்துவிட்டேன்..” என்றவர் அந்த பட்டத்தையே மேடையில் காட்ட கூட்டம் மொத்தமும் எழுந்து மேடையை நோக்கி ஓடியது.. “இப்போது இதை உடைக்கவா..? தூக்கியெறியவா..?” என்று பாரதிராஜா கேட்க ‘உடை..' ‘உடை..' என்று ஒட்டு மொத்தக் குரலும் எழும்பியது. பாரதிராஜாவின் கையை சேரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, உடைக்காமல் பார்த்துக் கொண்டபடியே மைக்கில் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
“இதனை உடைக்காமல் மத்திய அரசுக்கு அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்த அவமானத்தை அவர்கள் உணர்வார்கள்..” என்றார் சேரன். அமீரும் மற்ற இயக்குநர்களும் இதையே சொல்ல.. “சரி.. திருப்பி அனுப்பிவிடுங்கள்..” என்று ஒரு வார்த்தையில் இந்திய அரசின் முகத்தில் கரியைப் பூசியதோடு பேச்சினை முடித்துக் கொண்டார்.
இறுதியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நன்றி தெரிவிக்க கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தக் கூட்டத்தின் அனைத்துச் செலவுகளும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினுடையதுதான்.. கூட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும்வரையிலும் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கூட்டத்தினரை சுற்றிச் சுற்றி வந்தவர் அனைத்து ஏற்பாடுகளையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் செய்து வந்தார்.
மதிய நேரத்தில் வந்திருந்த அத்தனை பேருக்கும் லெமன் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து உபசரித்தார். லிட்டர், லிட்டராக குடிதண்ணீர் வந்து இறங்கியது.. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதும் கல்யாண வீட்டில் சொல்வதைப் போல், “சாப்பாடு நிறைய இருக்குய்யா.. சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கய்யா..” என்று வரிசை வரிசையாக வந்து சொன்ன சுந்தர்ராஜன் ஐயாவுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. இரவு கூட்டம் முடிந்த பின்பும் மீதமிருந்த சாப்பாட்டு பொட்டலங்களை பலரும் வாங்கிச் சென்றார்கள். வாங்காதவர்களின் கைகளில் வலுக்கட்டாயமாக பார்சல்கள் திணிக்கப்பட்டன.
இந்த கூட்டமும், தீர்மானங்களும் தமிழக, மத்திய அரசுகளை கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
அரசியல் கட்சிகள் என்றால் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்..' என்ற நோக்கில் பொதுமக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி அரசியல் கலப்படமற்றவர்கள் ஈழத்து பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதும், மத்திய, மாநில அரசுகளுடன் நேருக்கு நேர் மோதலுக்காக நிற்பதும், ஜனநாயகத்தில் பெரும் போர் தொடங்கியதற்கான முதல் காட்சி.
சோனியா, மன்மோகன்சிங் வருகையின்போதும், சில நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் தொகுதிகளில் நடக்கவிருக்கும் பிரச்சாரத்தின்போதும் இந்த தீர்மானத்தின் தாக்கம் தெரியத் தொடங்கும்..
அதுவரையில் நாமும் காத்திருப்போம்..
விடுதலையான உதயன் ஆசிரியரின் பேனாவிலிருந்து...
அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன்.அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத காலத்துக்கு அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றார் என்பது இன்று அப்பட்டமாகி யிருக்கின்றது; அம்பலமாகியிருக்கின்றது.
இந்தக் கைதும், அது இடம்பெற்ற முறையும், இடம்பெற்ற வேளையும், அதையொட்டி என்மீது அதிகார வர்க்கத்தினால் அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், இவ் விடயத்தையொட்டிய விசாரணைகள் சுமார் இரண்டு மாத காலத்துக்கு இழுத்தடிக்கப்பட்ட போக்கும் இந்த அதிகார அராஜக அத்து மீறலின் பின்னணியில் அரசியல் உள் நோக்கமும் பழிவாங்கலும் பிரதான காரணங்களாக இருந்தன என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமானவை.
பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக்கோரமான பேரவலத்தையும் பேரனர்த்தத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கும் பெருந்துயர்மிக்க இச்சமயத்தில்,
இந்தக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகவும், கூர்ந்தும் அவதானிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ள இச்சூழலில் தம் இன மக்களின் பேரவலம் பற்றிய உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் உலகுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் முரசறைந்து உணர்த்தும் களப்பணியில் வர லாற்றுப் பொறுப்பில் கண்துஞ்சாது ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு பத்திரிகை ஆசிரியர், அச்சமயத்தில் அப்பணியில் ஈடுபடவிடாது திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்படும் விதத்தில் தடுப்புக்காவலில் கம்பி எண்ணவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.
இனப்பிரச்சினையையொட்டிய யுத்தம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள இச் சமயத்தில் அது குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும், களநிலைமை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய செய்தி மூலமாகத் திகழ்பவர்கள் என்போன்ற ஊடக உயர் மட்டத்தினரே என்பது வெளிப்படையானது.
அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவரை இச்சமயத்தில் அபத்தமான குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தமையும் அந்தக் கைதையொட்டி அதிகார வர்க்கத்தினர் கிளப்பிவிட்ட "புலித்தொடர்பு" என்ற கற்பனைக் குற்றச்சாட்டும் இந்தக் கைதுத் திருவிளையாடலின் பின்னணியில் புதைந்து கிடக்கக்கூடிய உண்மைகளையும் நோக்கங்களையும் நீங்களே ஊகித்துக்கொள்ளப் போதுமானவை எனக் கருதுகிறேன்.
கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்பு வரை தமது விமானத்தில் வந்து தாக்குதல் நடத்திய புலிகளின் நடவடிக்கையுடன் நான் தொடர்புபட்டிருந்தேன் என்பதே அரசின் அதிகார தலைமையினால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.
ஓர் ஊடகவியலாளன் என்ற முறையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, செய்தித் தரப்புகளோடு தொடர்பு கொண்டு, தகவல்களைச் சேகரித்து வெளியிட்டமை தவிர அதற்கு அப்பால் இவ்விடயத்தில் நான் சம்பந்தப்படவுமில்லை; அத்துமீறிச் செயற்படவுமில்லை.
இப்போது அது விசாரணைகளில் தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது; உண்மை வெளியாகியிருக்கின்றது.
எம்மைப் பொறுத்த வரையில் செய்தியாளர்கள் என்ற முறையில், அரச மற்றும் படை உயர் மட்டங்களில் இருந்து, ஏனைய அனைத்துத் தரப்பினர்களுடனும் செய்திகளுக்காகத் தொடர்புகளை பேணுவது எமது தவிர்க்க முடியாத பணியாகிறது. அத்தகைய கடமைப் பொறுப்புகளுக்கப்பால் எத்தகைய தவறான அல்லது சட்ட விரோதமான செயற்பாடுகளையும் நான் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானதாகும்.
அன்றையதினம் எனக்கு வந்த அல்லது நான் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்தே முதலில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் உள்ளூரிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த அல்லது நான் அவற்றுக்கு மேற்கொண்ட சுமார் இருநூறு வரையான தொலைபேசி அழைப்புக்களின் மூலத்தைக் கண்டறிவதற்கு மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒருவாரகால அவகாசம் அதிகம்.
ஆனால் அந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே மேற்படி தாக்குதல் சம்பவ சமயத்திலோ அல்லது அதற்கு முன்னர் சுமார் இரண்டு மாத காலத்திலோ குற்றமிழைக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடிய தொலைபேசி அழைப்புகளுடன் நான் சம்பந்தப்பட்டேன் என்று சந்தேகிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை என்பதை என்னை விசாரணை செய்த பொலிஸார் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டனர்.
தொலைபேசி அழைப்புகள் பற்றிய விசாரணை முடிந்ததும் எனது வங்கிக் கணக்குகள் துருவப்பட்டன. எனது மனைவியின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. "பயங்கரவாதிகள்" மூலம் தவறான வழியில் நான் வருமானம் ஏதும் ஈட்டிக்கொண்டேனா என்பதைக் கண்டறிய எனது சொத்துக்கள், உடைமைகள் ஆய்வு செய்யப்பட்டன. நான் விற்ற, வாங்கிய சொத்துகள் குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சகல சமாதானப் பேச்சுகளின் போதும் ஊடகவியலாளன் என்ற முறையில் நேரில் பிரசன்னமாகி செய்தி சேகரிக்கும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிட்டி வந்திருக்கின்றது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்திருக்கின்றேன். தவிரவும் மூத்த ஊடகவியலாளருள் ஒருவன் என்ற முறையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கின்றேன்.
இந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள், அவற்றின் காரணங்கள், அதற்கான நிதி மூலம் குறித்தெல்லாம் துருவினார்கள். எதிலும் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இரண்டு மாத காலத்தில் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் நான்கு புலனாய்வுத் துறைகளும் என்னைப் பற்றி நடத்திய விசாரணைகள் நான் குற்றவாளி அல்லன் என்பதை நிரூபித்தமையால் வேறு வழியின்றி வழக்கு ஏதும் தொடராமலேயே என்னை விடுவிக்க வேண்டிய நிலைக்கு ஆட்சித் தரப்பு தள்ளப்பட்டது.
என்னைப் "பயங்கரவாதி" ஆகப் பிரகடனப்படுத்தும் அதிகாரத் தரப்பின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடு, அவற்றின் பின்புலத்தில் புதைந்து கிடக்கும் சூக்குமங்கள், அபத்தமான குற்றச் சாட்டுகள் போன்றவை மொத்தத்தில் நகைப்புக்கிடமானவை. அவற்றை விவரிப்பின் அது நீண்டு செல்லும்.
எனக்கு நேர்ந்த இந்த அவலத்துக்காக யாரையும் பழிவாங்கும் வெஞ்சினம் எனக்குக் கிடையாது.
அத்தோடு இன்று எமது தமிழ்ச் சகோதரர்கள் அனுபவிக்கும் பேரின்னல்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு நேர்ந்த அவல அனுபவம் பெரும் சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே. எனவே, தமிழர் தம் இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில் ஓர் ஊடக நிறுவனமும் அதன் பொறுப்பான பணியாளர்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயங்களில் ஒன்றாக இதனைக் கருதி, எமது பணியைத் தொடர நாம் திடசங்கற்பம் கொள்வதே எமது கருத்தாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
ஆனால், இத்தகைய அழுத்தந் தரும் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்கள் என்ற முறையில் நானும் "உதயன்", "சுடர்ஒளி" தினசரிகளில் என்னுடன் பணியாற்றும் எனது சக ஆசிரியபீட ஊழியர்களும், ஏனைய அலுவலர்களும் மற்றும் நிர்வாகத்தினரும் அவ்வப்போதும் தொடர்ந்தும் எம்மால் இயன்றவரை எமது கடமைகளைத் தொடர்வோம் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன்.
கொழும்பில் இரண்டு மாதகாலம் நான் தடுப்புக் காவலில் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், யாழ்ப்பாணத்தில் தங்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக "உதயன்" ஆசிரியர் பீடத்தின் தூண்களான இரு உயர் அலுவலர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக "உதயன்" அலுவலகத்துக்குள் தங்களைத் தாங்களே முடக்கி சிறைக் கைதிகளாக வைத்துக்கொண்டு ஆற்றும் பணியில்தானே உங்கள் "உதயன்" திட்டமிடப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைக்கூட எதிர்கொண்ட பின்னரும் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா?
நன்றி
இந்த நெருக்கடியான சமயத்திலும் எம்முடன் தோள் கொடுத்து ஆதரவு தந்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.
* எத்தகைய நெருக்கடி வரினும் அஞ்சாது பத்திரிகையைத் தவறாது வெளியிட வேண்டும் என்ற தமது நெஞ்சுரத்தை, படுகொலை இரத்தக் களரிகளுக்கு வழிவகுத்த அனர்த்த சம்பவங்களுக்கு நேரடியாக முகம் கொடுத்தசமயங்களில் கூடத் தயங்காது வெளிப்படுத்தி வரும் தமது வழமையான, துணிச்சல்மிக்க பாரம்பரியத்தை,எமது சக ஊழியர்கள் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமது ஆசிரியரை சீருடையினர் சகிதம் வெள்ளை வானில் வந்தோர் கடத்தி, அச்சுறுத்தி அதிர்ச்சி தந்த நிலையிலும் அவரைப் "பயங்கரவாதி" ஆகக் குற்றம் சுமத்தி முன்னிலைப்படுத்தியும்கூட தமது கடமையைத் தவறவிடாது தங்களை சுதாகரித்துக்கொண்டு ஒருநாள் பின்னடைவுதன்னும் காட்டாமல் அதே தரத்தோடும், வீச்சோடும், உறுதித் தெளிவோடும் இச்சமயத்தில் "உதயன்", "சுடர் ஒளி" நாளிதழ்களைத் தவறாமல் வெளியிடுவதை உறுதி செய்த தைரியம்மிக்க எமது நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்
* தடுப்புக் காவலில் இருந்த என்னை நேரில் வந்து சந்தித்து உற்சாகப்படுத்திய பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும்
* நான் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து எனக்காகக் குரல் எழுப்பிய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், ஊடக அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், பல் வேறு சமூக அமைப்புகள் ஆகிய தரப்பினருக்கும்
* என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டமை தொடர்பான விசாரணைக்காகப் பொலிஸாருக்கு ஒத்துழைத்த எனது நண்பர்கள், செய்தி மூலகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினருக்கும்
* என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்க உதவிய "இன்டர்போல்" நிறுவனத்துக்கும்
*என்னுடைய விடுதலைக்காக வற்புறுத்தி அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுத் தூதரகங்கள், இராஜதந்திரிகள்
* இரண்டு மாதத் தடுப்புக் காவலின் போது என்னைக் கௌரவத்துடன் நடத்தி, மரியாதை பேணி, அனுசரித்து நடந்த கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவு இயக்குநர் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய பொலிஸ் குழுவினருக்கும்
* நான் தடுப்புக்காவலில் வாடிய வேளை எனது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தைரியமும், உற்சாகமும் ஊட்டி தார்மீக ஆதரவு தந்த உள்ளூர் நண்பர்கள், உறவினர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் மற்றும் அன்பர்கள்
அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
உங்கள் ஆசி மற்றும் ஆதரவுடனும், "உதயன்", "சுடர்ஒளி" சக ஊழியர்களின் ஊக்கத்துடனும் எனது ஊடகப் பணி தொடரும் என உறுதி கூறுவதுடன், அதற்கு இறைவனின் அருளையும் இறைஞ்சுகின்றேன்.
ந.வித்தியாதரன் (ஆசிரியர் "உதயன்", "சுடர்ஒளி")
வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப்பேரவலமும் நீதி தவறிப்போன ஐக்கிய நாடுகள் சபையும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள் வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியின் ஊடாக இராணுவம் நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு வலையத்தை இரு பகுதிகளாக துண்டாடும் படையினரின் இந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடந்த 18 ஆம் நாள் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வவுனியா படை தலைமயகத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதிய ஒரு களமுனையை திறக்கும் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய கடந்த திங்கட்கிழமை (20) அம்பலவான்பொக்கனை பகுதியின் ஊடாக பாரிய படை நகர்வை அரசு மேற்கொண்டுள்ளது. 300,000 மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள 18 சதுர கி.மீ பரப்பளவுள்ள பாதுகாப்பான பிரதேசத்தின் மீது கனரக ஆயுதங்கள் சகிதம் படைத்தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.
இந்த தாக்குதலுக்கு ஏதுவாக தியத்தலாவை பகுதியில் இருந்து அதிகளிவிலான குறிபார்த்து சுடும் படையினரும், சிறப்பு படையணிகளை சேர்ந்த ஐந்து கொம்பனி துருப்புக்களும் கடந்த வராத்தின் இறுதிப்பகுதியில் வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான சிறப்பு படையணிகள் ஐந்தும், கேணல் ரால்ஃப் நுகேரா தலைமையிலான இரண்டாவது கொமோண்டோ படையணி என்பன விடுதலைப்புலிகளின் மண் பாதுகாப்பு அரண்களை தாண்டி உள்நுளைய முற்பட்டிருந்தன. இரண்டாவது கொமோண்டோ படையணியின் களமுனை தளபதியாக மேஜர் சமால் சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த படையணிகளுக்கு உதவியாக 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை சேர்ந்த (58-1, 58-2) 9 ஆவது கெமுனுவோச், 8 ஆவது கஜபா பற்றலியன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படை பற்றலியன் என்பனவும் சிறப்பு படை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. புதுமாத்தளன் பகுதியில் இருந்து அம்பலவான்பொக்கணை பகுதி வரையிலான 3 கி.மீ நீளமான பாதுகாப்பு மண் அணைகளை கைப்பற்றி உள்நுளைவதே இவர்களின் திட்டம்.
வடமுனையின் தாக்குதல் திட்டம் இரண்டாவது கொமோண்டோ படையணியிடமும், 8 ஆவது கஜபா படையணியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்று பிரிவுகளாக நகர்வை மேற்கொண்ட கொமோண்டோ படையணியினை இரண்டு கப்டன் தர அதிகாரிகளும், ஒரு மேஜர் தர அதிகாரியும் வழிநடத்தியிருந்தனர்.
சிறப்பு படையணி ஒன்றுடன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படையணி தென்முனையில் அம்பலவான்பொக்கணை பகுதியில் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. நடுப்பகுதியில் 9 ஆவது கெமுனுவோச் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள்வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற சமரில் அதிகளவிலான பொறிவெடிகளையும், மிதிவெடிகளையும் எதிர்கொண்ட படைத்தரப்பு அம்பலவான்பொக்கனை பகுதியில் உள்ள மிதிவெடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு கடந்த 19 ஆம் நாள் அன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்ற மக்களில் பல நூறு மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி கண்ணி வெடி வயல்களின் ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கண்ணிவெடிகளில் சிக்கிய பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், அதிகளவான மக்கள் படுகாயமடைந்திருந்தனர். பொதுமக்களுடன் நகர்வை மேற்கொண்ட இராணுவ அணிகள் மீது தாக்குதலை மேற்கொள்வது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அணிகள் தமது நிலைகளில் இருந்து பின்நகர இராணுவம் முதலாவது மணல் பாதுகாப்பு அரணை அதிகாலை கைப்பற்றி கொண்டது.
எனினும் விடுதலைப்புலிகளின் சிறப்பு தாக்குதல் படையணிகள் களமுனைக்கு நகர்த்தப்பட்டு இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் அணிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டபோது அங்கு கடுமையாக சமர் மீண்டும் வெடித்திருந்தது. உக்கிர சமரை தொடர்ந்து படைத்தரப்பு அதிகளவான இழப்புக்களை சந்தித்ததுடன் கைப்பற்றிய நிலைகளில் இருந்து திங்கட்கிழமை மாலை பின்வாங்கியிருந்தனர்.
இந்த சமரின் போது விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சிக்கி கொண்ட 12 பேர் கொண்ட இராணுவத்தின் கொமோண்டோ படையணி ஒன்றின் கப்டன் தர கட்டளை அதிகாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.
மேலும் இந்த நடவடிக்கையில் 36 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதுடன், 50 மேற்பட்டோர் கால்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படை அதிகாரிகள் கொல்லப்பட்ட இலகுகாலாட் படையினரின் இழப்புக்களை தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர். விடுதலைப்புலிகளின் 14.5 மி.மீ கனரக துப்பாக்கியின் தாக்குதலில் சிக்கியும், ஆழமான குழிகளினுள் வீழந்தும், பொறிவெடிகளில் சிக்கியும் அதிகளவான படையினர் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு 7 ஆவது இலகுகாலாட்படை பற்றலியன், 6 ஆவது கெமுனுவோச், 10 ஆவது, 12 ஆவது, 14 ஆவது, 20 ஆவது கஜபா பற்றலியன் படையினரும் நகர்த்தப்பட்டிருந்தனர்.
படையினாரின் இந்த நடவடிக்கையை பொறுத்தவரையில் அம்பலவான்பொக்கனை பகுதியை ஊடறுத்து கடல் பகுதியுடன் ஒரு தொடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அம்பலவான்பொக்கனை பகுதிக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள மக்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டு வருவதே படையினரின் திட்டம்.
தாக்குதல் ஆரம்பமாகிய சில மணிநேரங்களில் படையினர் மேற்கொண்ட செறிவான எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கி 1500 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 3000 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் 476 பேர் சிறுவர்கள் என்பதுடன், காயமடைந்தவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம்.
கடந்த 20 ஆம் நாளில் இருந்து 22 ஆம் நாள்வரையிலும் நடைபெற்ற தாக்குதல்களில் ஏறத்தாள 2500 மக்கள் வரையில் பாதுகாப்பு வலையத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 5000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு குறுகிய பரப்பளவினுள் சிறீலங்கா இராணுவம் பல ஆயிரம் எறிகணைகளை ஏவியிருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணைகளில் கணிசமான அளவு எறிகணைகள் வெள்ளைபொஸ்பரஸ் (றூவைந phழளிhழசரள ளாநடடள) எனப்படும் இரசாயணம் சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்டவை. அவை வீழந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறுவர்களும், மதியவர்களும் மூச்சுத்திணறியும் இறந்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.
கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்த மாட்டோம் என சிறீலங்கா அரசு ஐ.நாவுக்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் உறுதி அளித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இதனை ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் கடந்த வாரமும் சிறீலங்கா அரசிற்கு நினைவுபடுத்தியிருந்த நிலையில் கனரக ஆயுதங்களை மட்டுமல்லாது இரசாயண ஆயுதங்களையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா அரசு பயன்படுத்தியுள்ளது.
மேலும் பெருமளவான அப்பாவி மக்களை கண்ணி வெடிவயல்களை செயலிழக்க செய்யும் மனித கேடயங்களாக இராணுவம் பயன்படுத்தியிருந்ததுடன் அவர்களை சுட்டு படுகொலையும் செய்துள்ளது. இவை போரியல் குற்றங்களாகும். கடந்த திங்கட்கிழமை (20) மேற்கொண்ட தாக்குதல்களை தொடர்ந்து செவ்வாய்கிழமை (21) மற்றும் புதன்கிழமையும் (22) இராணுவம் தொடர்ச்சியாக பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு வந்திருந்தது. புதுமாத்தளன் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்களும் விடுதலைப்புலிகளும் வெளியேறிய நிலையில் இராணுவம் கடந்த செவ்வாய்கிழமை புதுமாத்தளன் பகுதியை கைப்பற்றியுள்ளது.
தனது படை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான கருத்துருவாக்கங்களை மறைப்பதற்காக சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாகவும், ஓரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படையினாரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாகவும் பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் இந்த பத்தி எழுதப்படும் வரையிலும் ஓமந்தை பகுதிக்கு 6500 மக்களும், யாழ்குடாநாட்டுக்கு 4000 பேர் வரையிலும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மீதம் 90,000 மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்கள் இல்லை. எனவே பெருமளவிலான மக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளார்கள் என அரசு பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றதா? அல்லது அதிகளவிலான மக்கள் வன்னியில் உள்ள படையினரின் தளங்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. சிறீலங்கா அரசின் பிரச்சாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்த பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை.
இருந்த போதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் நாள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்படவுள்ள சிறீலங்கா தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவுமே சிறீலங்கா அரசு தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்த பேரவலமாக நிலையை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை (21) ஐ.நாவின் பாதுகாப்பு சபை உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. சீனா, ரஷ்யா உட்பட அதன் 15 உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடல்களுக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் ஐ. நா செயலாளர் நாயகம் பாக் கீ மூன் இன் பிரதம அதிகாரியான விஜய் நம்பியார் தனது சிறீலங்கா விஜயம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என சபையில் கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர் அது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு மறுத்தது அங்கு பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தது.
நம்பியாரின் இந்த முடிவை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்று நேரடியாகவே எதிர்த்திருந்ததாக ஐ.நாவின் ஊடக மையமான இன்ன சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
ஒரு மனிதப்பேரவலமான நிலையில் அது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துமாறு ஐ.நாவினால் அனுப்பப்பட்ட பிரதிநிதி அது தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை கலந்துரையாடலில் தகவல் வெளியிட மறுத்தது இதுவே முதற்தடவை. அவர் தனது பதவியையும், ஐ.நாவையும் அவமதித்துள்ளதாகவே பல அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
எனினும் நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவது பொருத்தமானது.
நம்பியார் இந்திய அரசின் பிரதி பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், இந்தியாவின் பாதுகாப்பு சபையின் செயலாளர்களின் தலைவராகவும் பணியாற்றியிருந்தது கவனிக்கத்தக்கது.
மேலும் அண்மையில் மூன்று நாள் விஜயமாக சிறீலங்காவுக்கு வந்து சென்ற நம்பியார் இந்தியாவில் தங்கி சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போதைய போரில் இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு படைத்துறை மற்றும் நிதி உதவிகளை மட்டும் வழங்கி வரவில்லை அதனுடன் இராஜதந்திர ரீதியாகவும் உதவிகளை வழங்கி வருகின்றது என்பது தெளிவாகியுள்ளது.
சிறீலங்கா அரசுக்கு ஏற்படும் இராஜதந்திர அழுத்தங்களை இந்திய மத்திய அரசு ஐ. நாவின் ஊடாக குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது தற்போது வெளிப்படையானது.
இதனிடையே ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மைக்காலமாக சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பிலும் அனைத்துல அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் அதிதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், தமிழ் மக்களும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
வன்னியில் மனிதப்பேரவலம் ஓன்று உருவாகியுள்ள போதும், ஐ.நாவின் தகவல்களின் பிரசாரம் அங்கு கடந்த மூன்று மாதங்களில் 6432 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள போதும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் போர் நிறுத்தம் என்ற சொற் பிரயோகத்தை தனது அறிக்கைகளில் பயன்படுத்த தவறியது பாரிய விசனங்களை தோற்றுவித்துள்ளது.
அகில உலகமும் போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசிய போதும் உலகில் அமைதியையும், மனிதாபிமானத்தையும் நிலைநாட்ட என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசாது சோரம் போயுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த புதன்கிழமை (22) மூடிய அறைக்குள் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியேகப்பற்றற்ற கூட்டத்தில் நம்பியார் தனது அறிக்கையை வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தார்.
எனினும் அவரின் கருத்துக்களை பார்க்கும் போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஒரு மனிதாபிமான பிரச்சனை மட்டுமே என்ற வட்டத்திற்குள் முடக்கிவிட அவர் முயல்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருந்தது. அதாவது கடந்த செவ்வாய்கிழமை (21) அவர் வெளியிட்ட கருத்துக்களில் சிறீலங்காவில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் இல்லை மனிதாபிமான பிரச்சனைகளே உள்ளன என்ற கருத்துப்பட அவர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (22) நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தினை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையழித்துவிட்டு சரணடையவேண்டும் என ஐ.நா கேட்டுக்கொண்டது தமிழ் மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள் தள்ளியுள்ளது.
ஆனால் ஐ.நாவின் இந்த நீதி தவறிய போக்கிற்கான காரணம் என்ன என்பது தற்போது தெளிவாக உள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். அதாவது ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரியாக தற்போதைய போரை முன்னின்று நடத்திவரும் இந்தியாவை சேர்ந்த விஜய் நம்பியார் போன்றவர்கள் பணியாற்றும் போது தமிழ் மக்கள் எவ்வாறு ஐ.நாவிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.
எனினும் நடைபெறும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது எதிர்வரும் நாட்கள் பல இராஜதந்திர நகர்வுகளை கொண்ட நாட்களாக இருக்கும் என்பதுடன், மோதல்களும் மேலும் உக்கிர நிலையை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-நன்றி வீரகேசரி வெளியீடு -
ஈழத் தமிழர்கள் நாள் தோறும் படுகொலை: இந்தியாவில் ஏன் இந்த அமைதி? எழுத்தாளர் அருந்ததி ராய் வினா
இலங்கையில் நிகழ்ந்து கொண் டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மவுனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடு களிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, பன்னாட்டுச் செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவரு வதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாகும்.இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, நாட்டில் சனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பரப்புரையை இலங்கை அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது. தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் இலங்கை அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்குமிடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது. சண்டை நடக்கும் பகுதியில் 2 இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, இடம் பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு "நலம் காக்கும் சிற்றூர்கள்" அமைக்கப்பட்டுள்ள தாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், "போர் நடக்கும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும்" என்று "தி டெய்லி டெலிகிராப்" (2009 பிப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது. இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? இலங்கை அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர "தி டெய்லி டெலிகிராப்" நாளேட்டில் பின்வருமாறு கூறியிருக்கிறார்: "பாது காப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது. ஆனால், 1930-களில் இட் லரின் நாஜிப் படையினர் பயன்படுத்தி யது போல, இது வேறு காரணங் களுக்காகப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.விடுதலைப் புலிகளைத் "துடைத்து எறிய வேண்டும்" என்பதை இலங்கை அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், "பயங்கரவாதிகளும்" வீழ்ந்து கொண்டிருப்பது, இலங்கை அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது. ஏற்கனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந் துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்பு களாக உள்ளன. இலங்கையில் இப்போது நடந்த கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். தண்டனைக்கு உட்படாமல் இலங்கை அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடி யுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள் ஒதுக்கப்படு வதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழி வகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திர வதை என நீண்ட வரலாறு உண்டு. வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டு களாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.ஏன் இந்த மவுனம்? "இலங்கை யில் இன்று சுதந்திரமாகச் செயல்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை" என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீரா கூறியிருக்கிறார்.இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்று சேரவில்லைசமுதாயத்தை "அச்சத்தில் உறைய வைக்கிற" கொலைக் கும்பல்கள், "வெள்ளை வேன் கடத்தல்கள்" பற்றி எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உள்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப் படுகின்றனர், படுகொலை செய்யப்படு கின்றனர். பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் இலங்கை அரசு பயன்படுத்துவதாக பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாற்றியுள்ளது.மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு பொருளுதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரி விக்கின்றன. உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற் றுக்கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ் தான்? சீனா? இலங்கை நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளை விக்க என்ன செய்கின்றன?இலங்கையில் நடக்கும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்பு களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மவுனம்? இந்தச் சிக்கலில் இங்கே "வெள்ளை வேன் கடத்தல்கள்" எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும் போது, இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயல்படும் இந்திய அரசின் நீண்டகால வரலாற்றைப் பார்க்கும் போது இந்த மவுனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உள்பட, நம்மில் பலரும், இதுபற்றி முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.படுகொலைகள் தொடர்கின்றன. பத்தாயிரக்கணக்கான மக்கள் சித்திர வதை முகாம்களில் அடைக்கப்படு கிறார்கள். 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர் நோக்கி உள்ளனர். ஓர் இனப்படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப் பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும்.நன்றி: தென்செய்தி அதிகாரப் பகிர்வு மிஞ்சுமா?
போர் முடிவுற்றதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வரப்படும் என்ற தோற்றம் ஒன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசினால் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது.மிகக் குறிப்பாக அரசமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ், அதிகாரப் பகிர்வு வழங்கும் நடைமுறைகளை அறிமுகம் செய்யும் தீர்வுப்பொதி ஒன்று முன்வைக்கப்படும் என்ற தோரணையில் சர்வதேச வட்டாரங்கள் நம்பும் விதத்தில் அரச தரப்பில் தகவல்கள் அடிக்கடி வெளியிடப்படுவது உண்டு.
இந்தியாவும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றவாறு, 13 ஆவது சட்டத்திருத்தம் தனது முயற்சியினால் ராஜீவ் ஜே.ஆர்.ஒப்பந் தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்டது என்ற "பிடியுடன்"" இலங்கை இனப்பிரச்சினைக்கு நம் பகத்தன்மை கொண்ட அதிகாரப் பரவல் என்ற பாடலை அடிக்கடி கீறல் விழுந்த இசைத் தட் டுப் போன்று ஒலித்துவருகின்றது.
இப்போது இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் காலம். அதன்போது காங்கிரஸ் கட்சி யின் வாக்கு வங்கியைத் தமிழகத்தில் பெருக்கும் உள்நோக்கத் தோடு, ஈழத்தில் தமிழர்களுக்கென இரண்டு மாநிலங்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசுடன் ஏற்பாடு செய்யப்படும் அல் லது பேச்சு நடத்தப்படும் என்று அமைச்சர் ப.சிதம் பரம் பெரும் தொனியில் பேசிவருகிறார்.
இத்தனைக்கும் அரசமைப்புக் சட்டத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்கீழ் இணைக்கப்பட்டி ருந்த வடக்கு கிழக்கு மாகாணசபை வடக்குத் தனியாகவும் கிழக்குத் தனியாகவும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட் டது. அப்போதெல்லாம், அதனைத் தடுப்பதற்கு ஏதேனும் மாற்று நடவடிக்கையைக் கூட உச் சரிக்காத அமைச்சர் சிதம்பரம், இப்போது தமது இயலாத் தன்மையை அல்லது ஒத்தூதும் பாணியை மாற்றி, இலங்கையில் இரண்டு மாநிலங்களுக்கு வகை செய்யப்படவேண்டும் என்று தேர்தல் "புலுமாசு" விடுகிறார்.
தமிழர் பிரச்சினைக்கு அவர்களுக்குரிய உரிமை களை வழங்கி அரசியல் தீர்வைக் காண்பதில் இலங்கை அரசு நேர்மையாகவும் விசுவாசமாக வும் இருக்குமாயின் இணைந்திருந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கமாட்டாது. நீதிமன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்டிருந்த வாசகத்திற் கேற்ப வடக்கு கிழக்கை நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் கொண்டுவந்து இணைத்திருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. வடக்கு, கிழக்கு நடைமுறை ரீதியாக, நிர்வாக ரீதியாக இரண்டுபட ஏற்பாடாகியுள்ளது.
இத்தனைக்கும் பிறகு இப்போது 13 ஆவது சட்டத்திருத்தத்தின் பிர காரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை அவற்றிடம் இருந்து பிடுங்கி எடுத்து மத்திய அரசின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் ஒப்பேற உள்ளன.
இன்னும் இரண்டு நாள்களில் (நாளை மறு தினம்) உள்ளூராட்சி விசேட ஏற்பாடுகள் திருத் தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
மாகாணசபைகள் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு வழங் கப்பட்ட அதிகாரங்களை நடாளுமன்றத்துக் குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கான சட்டமூலம் அது.
இத்தனைக்கும் பிறகு இப்போது 13 ஆவது சட்டத்திருத்தத்தின் பிர காரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை அவற்றிடம் இருந்து பிடுங்கி எடுத்து மத்திய அரசின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் ஒப்பேற உள்ளன.
இன்னும் இரண்டு நாள்களில் (நாளை மறு தினம்) உள்ளூராட்சி விசேட ஏற்பாடுகள் திருத் தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
மாகாணசபைகள் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு வழங் கப்பட்ட அதிகாரங்களை நடாளுமன்றத்துக் குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கான சட்டமூலம் அது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மிகவும் பாதிக்கப்படப்போவது, இப்போது இயங் கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணசபை என்று அச் சபையினர் சுட்டிக் காட்டுகின்றனர். வடக்கு மாகாண சபை இயங்குமெனில் அதுவும் இந்த வரிசையில் நிச்சயம் சேரும் என்பதில் சந் தேகம் என்ன?
அதிகாரப் பகிர்வுக்கு எதிரும் புதிருமான இத் தகைய ஏற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான அர்த்த புஷ்டியான தீர்வு ஒன்றை எவரும் எதிர் பார்க்க முடியாது என்று முரசறைகின்றன.
கொடுத்த "பிச்சையை" தட்டிப் பறிக்கும் இந் தச் செயல், அதிகாரப் பகிர்வு என்ற நிர்வாக ஆட்சிக்கோட்பாட்டை செல்லுபடியற்றதாக்கும் முயற்சி.
இத்தகைய ஒரு பின்புலத்தில் சமஷ்டி, சுயநிர்ண யம் என்ற அரசியல் கோட்பாடுகளை தூரவைத்து நுகர்ந்து பார்க்கவும் இலங்கை அரசு விரும்பாது என்பது உணர்த்தப்படுகிறது.
மறுபுறத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்று வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பது எங்ஙனம்?
[நன்றி - உதயன்]
அதிகாரப் பகிர்வுக்கு எதிரும் புதிருமான இத் தகைய ஏற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான அர்த்த புஷ்டியான தீர்வு ஒன்றை எவரும் எதிர் பார்க்க முடியாது என்று முரசறைகின்றன.
கொடுத்த "பிச்சையை" தட்டிப் பறிக்கும் இந் தச் செயல், அதிகாரப் பகிர்வு என்ற நிர்வாக ஆட்சிக்கோட்பாட்டை செல்லுபடியற்றதாக்கும் முயற்சி.
இத்தகைய ஒரு பின்புலத்தில் சமஷ்டி, சுயநிர்ண யம் என்ற அரசியல் கோட்பாடுகளை தூரவைத்து நுகர்ந்து பார்க்கவும் இலங்கை அரசு விரும்பாது என்பது உணர்த்தப்படுகிறது.
மறுபுறத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்று வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பது எங்ஙனம்?
[நன்றி - உதயன்]


















